ஒவ்வாமை (allergies) இருப்பவர்கள் ஃபைசர்/பயோஎன்ரெக் தடுப்பு மருந்து எடுக்க வேண்டாம் – பிரித்தானியா எச்சரிக்கை!

மருந்துகள், பருவ நிகழ்வுகள், உணவு, இதர உயிரினங்கள் போன்றவற்றுக்கு ஒவ்வாமையை (allergy) வெளிப்படுத்தும் உடல்நிலையைக் கொண்டவர்கள் ஃபைசர்/பயோஎன்ரெக் தடுப்பு மருந்து எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளும்படி பிரித்தானிய மருந்துக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. தடுப்பு மருந்தை எடுத்த இரண்டு தேசிய மருத்துவப் பணியாளர் சில எதிர் அறிகுறிகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வறிவித்தல் விடப்பட்டுள்ளது.

இரண்டு பணியாளரும் எபிநெஃப்றீன் எனப்படும் ஒவ்வாமைக்கான தானியக்க செலுத்தியை (auto injectors) அணிந்திருந்தார்கள் என்றும் இது, சில காரணிகளுக்கு அவர்கள் ஒவ்வாமையைக் கொண்டிருப்பவர்கள் என்பதை உறுதி செய்தது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒவ்வாமை அறிகுறி காணப்படும்போது அட்றீனலின் என்னும் பதார்த்தத்தை இக் கருவி உடலிற் செலுத்துகிறது. சிலர் எபி பென் மூலம் இதைச் செலுத்துகிறார்கள். மகரந்தம், தேனீக் கடி, வேர்க்கடலை போன்ற காரணிகள் சிலரது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.</p>

பிரித்தானியாவில் கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து பிரயோகம் ஆரம்பித்துள்ள நிலையில், ஃபைசர் /பயோஎன்ரெக் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மருந்தை தேசிய சுகாதாரத் திணைக்களம் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறது.</p>

ஒவ்வாமை உள்ளவர்கள் இம் மருந்தை எடுக்கக்கூடாது என இம் மருந்தின் தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கை வழங்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது. தோலில் நமைச்சல் (itching), முகம் அல்லது நாக்கு வீங்குதல் ஆகியந இம் மருந்திந் ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் என இம் மருந்து தயாரிப்பாளர்களின் குறிப்புப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்விரண்டு பணியாளர்களும் சுகமடைந்து வருவதாகவும், இருப்பினும், தீவிர ஒவ்வாமையுள்ளவர்கள் இம் மருந்தை எடுப்பதைத் தவிர்க்கும்படி தாம் எச்சரித்துள்ளதாகவும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர், பேராசிரியர் ஸ்டீபன் போவிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு தடுப்பு அல்லது சாதாரண மருந்து, உணவு போன்ற ஏதாவதொரு காரணிக்கு முன்னர் தீவிர ஒவ்வாமையைக் கொண்டிருப்பவர்கள் என அறியப்பட்டவர்கள் மற்றும் எபி பென் (epi pen / adrenaline auto injector) பாவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டவர்கள் இத் தடுப்பு மருந்தை (ஃபைசர்/பயோஎன்ரெக்) எடுக்க வேண்டாமென அறிவுத்தப்படுகிறார்கள்” என இவ்வாணையத்தின் அறிக்கை கூறுகிறது.

இத் தடுப்பு மருந்தை எடுத்தவர்களின் உடல்நிலை பற்றிய தரவுகளைச் சேமிப்பதற்கு இவ்வாணையம் சமீபத்தில் ஒரு செயற்கை விவேக நிறுவனத்தின் சேவையை வாங்கியிருந்தது. இதன் ஆய்வின் பிரகாரம், அடுத்த 6-12 மாதங்களில், 50,000 முதல் 100,000 பேர் வரை இம் மருந்துக்கு எதிர்வினையைக் (adverse reaction) காண்பிப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.

இத் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனைகளின்போது இதுவரை 44,000 பேர் முதலாவது ஊசியையும், 42,000 பேர் இர்ணடாவது ஊசியையும் போட்டுள்ளார்கள் என்றும் இவர்கள் எவரும் பாரதூரமான எதிர்வினைகளைக் கொண்டிருக்கவில்லை எனவும் ஃபைசர்/பயோஎன்ரெக் அறிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email