உள்ளி – 99.9% கோவிட், காய்ச்சல் வைரஸ்களைக் கொல்கிறது!

அவுஸ்திரேலியாவில் விளையும் ஒரு வகை உள்ளி 99.9% கொறோணா மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்குக் காரணமான வைரஸ்களைக் கொல்லும் திறமையைக் கொண்டது என சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது.

சீன மருத்துவத்தில் நீண்டகாலமாகப் பாவிக்கப்பட்டுவரும் உள்ளி பக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கொல்லும் ஆற்றலுடையது என ஏற்கெனவே அறியப்பட்டது. ஆனால் உலகில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அவுஸ்திரேலியாவில் விளையும் ஒருவகை உள்ளி கோவிட் மற்றும் காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ்களை 99.9% வினைத்திறனுடன் கொல்லும் ஆற்றலுடையது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ண், அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள ‘தி பீட்டர் டொஹெர்ட்டி இன்ஸ்டிடியூட்’ என்னும் ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது அவுஸ்திரேலியாவில் வளரும் ஒருவகை உள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றைப் பரிசோதித்தபோது அது SARS-CoV-2 மற்றும் Influenza Type A வைரஸ்களை 99.9% வினைத்திறனுடன் கொல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் செய்யப்பட்ட இப்பரிசோதனையின்போது 20 வகையான உள்ளிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகள் கோவிட்-19 வைரஸ்களின்மீது பிரயோகிக்கப்பட்டன. “ஆரம்பத்தில் எனக்கு இதில் நம்பிக்க இருக்கவில்லை ஆனால் AGP Products நிறுவனத்தினால் வளர்க்கப்பட்ட உள்ளி வகை மட்டும் சார்ஸ்-கொவ்-2 மற்றும் இன்ஃபுளுவென்சா வைரஸ்களை ஏறத்தாள 99.9% கொன்றழித்துவிட்டது” எனக் கூறுகிறார் இவ்வாய்வில் ஈடுபட்ட டாக்டர் ஜூலி மக்கோலி. வேறு பல பண்ணைகளிலும் விளையும் இவ்வகை உள்ளி மீது இப்பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அநைத்துப் பரிசோதனைகளிலும் இதே பெறுபேறுகளே கிடைத்தன எனவும் டாக்டர் மக்கோலி கூறுகிறார். இதன் மூலம் உள்ளிகள் வளரும் சூழல், போஷக்கு, நீர் அல்லது வேறு காரணிகள் இதற்குக் காராணமல்ல என்பதைத் தாம் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஆனாலும் இப்பரிசோதனைகளை மனிதரில் செய்வதன் மூலமே (clinical trials) முற்றாக நிரூபிக்க முடியுமென டொஹெர்ட்டி இன்ஸ்டிடியூட் தெரிவிக்கிறது.

(Image Credit: team voyas on Unsplash)

Print Friendly, PDF & Email