உயர் வெப்பத்தினால் (Hyperthermia) புற்றுநோயைக் குணப்படுத்தல்
அகத்தியன்
உடலை அல்லது உடலின் நோயுற்ற பகுதியை உயர் வெப்பநிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் புற்றுநோய் போன்ற சில நோய்களைக் குணப்படுத்தும் நடைமுறை பல்லாயிரமாண்டுகளாக நம் முந்னோர் பின்பற்றி வருமொன்று. ஆனால் நவீன விஞ்ஞானமும், கற்றோரும் இந்நடைமுறைகளைப் பில்லி சூனிய வகையறாக்களுக்குள் முடக்கி அவற்றை ஏளனம் செய்து ஒதுக்கி வைத்திருந்தனர். கடந்த சில வருடங்களாக இப்படியான புராதன சிகிச்சை முறைகளை விஞ்ஞானிகள் ஏற்று நவீன விஞ்ஞான கருவிகளின் உதவியுடன் மீளவும் நடைமுறைக்கு உடபடுத்தி வருகிறார்கள். இப்படியான நடைமுறையொன்றுதான் உயர் வெப்பத்தைத் (hyperthermia treatment) கொண்டு புற்றுநோய்க்குச் சிகிச்சையளித்தல்.
உயர்வெப்பச் சிகிச்சை (Hyperthermia Treatment) என்றால் என்ன?
இம்முறைப்படி புற்றுநோய் கண்ட ஒருவரது உடலுறுப்பை அல்லது புற்றுநோய்க் கழலையை 45 பாகை C (113 பாகை F) வெப்பநிலைக்கு உயர்த்துவதன் மூலம் புற்றுநோய்க் கலங்களைக் கொல்வதுதான் சிகிச்சை முறை. இந்நடைமுறையின்போது அருகிலுள்ள ஆரோக்கியமான கலங்கள் இறந்துபோகாமலோ அல்லது பழுதடைந்துபோகாமலோ பார்த்துக்கொள்ள நவீன கருவிகளை மருத்துவர்கள் பாவிக்கிறார்கள்.
இந்நடைமுறையின்போது பல வித்தியாசமான உத்திகள் பாவிக்கப்படுகின்றன. கழலை இருக்கும் பகுதியை விறைக்கச் செய்த பின்னர் அதனுள் மைக்கிரோவேவ் கதிர்களைச் செலுத்தி புற்றுநோய்க் கலங்களைக் கொல்வது ஒரு முறை. (நாம் வீடுகளில் பாவிக்கும் மைக்கிரோவேவ் அடுப்புகள் இப்படியான உயர் அதிர்வெண் ஒலொ அலைகளை உணவில் செலுத்துவதன் மூலம் அவற்றைச் சூடாக்கின்றன) இதேபோல வலுவுள்ள் ரேடியோ அலைகளை கழலைக்குள் செலுத்துவது, லேசர் கதிர்களைச் செலுத்துவது, உயர்வெப்பநிலையிலுள்ள இரத்தம் அல்லது இரசாயனப் பதார்த்தங்கள் (chemo therapy) போன்றவற்றை உடலுக்குள் அனுப்புவது, முழு உடலையுமே ஒரு உயர்வெப்ப அறையினுள் வைத்திருப்பது, உயர்வெப்ப சுடுநீரில் குளிப்பாட்டுவது அல்லது உயர்வெப்ப கம்பளிகளியால் உடலைச் சுற்றிக்கொள்வது எனப் பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.
காய்ச்சல், வியர்வை ஏன் ஏற்படுகின்றன?
ஒருவரது உடலில் நுண்கிருமி (pathogens) தொற்றிவிட்டதென உடல் அறிந்தவுடன் அவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் உடனடியாக முடுக்கிவிடப்படுகின்றன. உடலின் நிர்ப்பீடன சக்தி (immune system) தனது பாதுகாப்பு படைகளைத் தயார்படுத்த அவகாசம் தேவை. முன்னணிப் படைகள் எதிரிகளைத் தாக்கத் தொடங்கினாலும் உண்மையான தாக்குதல் எதிரிகளை இன்னாரென அடையாளம் கண்டபின்னர்தான் மேற்கொள்ளப்படும். இதற்கு உடலுக்கு கால அவகாசம் தேவை. ஆனால் அதற்கு முன்னர் உடல் பாவிக்கும் முக்கியமான செயல்முறை உடலின் வெப்பத்தை அதிகரிப்பது. இதனால் உடற் கலங்களிலோ (வைரஸ்) அல்லது குடல், இரத்தம் போன்றவற்றிலோ ஒளிந்திருக்கும் (பக்டீரியா) கிருமிகளை இவ்வுயர் வெப்பம் கொல்லவோ அல்லது அவற்றின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தவோ முலலும். இதயே நாம் காய்ச்சல் என்கிறோம். ஆனால் இவ்வுயர் வெப்பம் எந்த அளவுக்குள் இருக்கவேண்டுமென்பதும் உடலுக்குத் தெரியும். ந்மது வீடுகளில் (குளிர் நாடுகளில்) இருக்கும் வெப்பக் கட்டுப்பாட்டுக் கருவி (thermostat) போல மூளையிலும் ஒன்றுண்டு. உடலின் வெப்பம் (காய்ச்சல்) அதியுச்ச நிலைக்கு வந்தவுடன் மூளை அதஹி நிறுத்துவதோடல்லாமல் உடலைச் சடுதியாகக் குளிரவைக்கும். இதற்காக அது பாவிக்கும் நடைமுறைதான் வியர்வை.
முன்னோர் நடைமுறைகள்
உடலை வெப்பமாக்குவதன் மூலம் பலவித நோய்களுக்கும் சிகிச்சையளிக்கும் முறை உலகின் பல்வேறு ஆதிக்குடிகளின் கலாச்சாரத்தில் இருந்தன. மெக்சிக்கோவில் ஆதிவாசிகளின் ந்டைமுறைகளை நவீனமயப்படுத்தி வெப்ப அறைகளை உருவாக்கி சிகிச்சைகளை அளிக்கிறார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்நடைமுறை இன்னும் பரவலா அங்கீகரிக்கப்படவில்லை என்பதனால் பலர் இச்சிகிச்சைக்காக மெக்சிக்கோவிற்குப் போகிறார்கள். ஸ்காண்டிநேவிய நாடுகளில் உயர்வெப்ப நீராவி அறைகளில் இருந்துகொண்டு ஒருவித குழையினால் உடலை அடித்து வெப்பத்தோடு வியர்வையை உண்டாக்கும் முறை பொதுவாக மக்களால் பின்பற்றப்படுமொன்று. தென் இந்தியாவில் சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மூலிகைகளை நெருப்பில் வாட்டி சிகிச்சையளிக்கும் நடைமுறையுண்டு.
புற்றுநோய்களை உயர்வெப்ப சிகிச்சையால் குணப்படுத்தல்
குடல் வளரி (appendix), சிறுநீர்ப்பை (bladder), மூளை (brain), மார்பகம் (breast), இடுப்பு (cervical), களம் (esophageal), தலை-கழுத்து (head & neck), ஈரல் (liver), நுரையீரல் (lungs), தோல் (melanoma), மார்பு – வயிற்று (mesothelioma), எலும்பிழையம் (sarcoma), பெருங்குடல் (rectal) ஆகிய உறுப்புகளில் வரும் புற்றுநோய்களைக் குணப்படுத்த உயர்வெப்ப சிகிச்சைமுறை பாவிக்கப்படுகிறது. சில சிகிச்சை நிலையங்களில் கதிரியக்க சிகிச்சை (radiation), இரசாயன பதார்த்த சிகிச்சை (chemo therapy) போன்ற சிகிச்சைகளுடன் உயர்வெப்ப சிகிச்சை முறையும் பாவிக்கப்படும்போது புற்றுநோய்க் கழலைகள் விரைவாகச் சுருக்கமடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முறை
உயர்வெப்ப சிகிச்சைமுறையின்போது புற்றுநோய்க் கழலையில் சிறு வெப்பமானிகளுடன் கூடிய ஊசிகள் செலுத்தப்படுகின்றன. வெப்பம் கட்டுப்பாடடளவை மீறிவிடக்கூடாது எனபதற்காக வெப்பமானிகள் மூலம் மருத்துவர்கள் வெப்பநிலையைத் தொடர்ந்து அவதானித்து வருவார்கள். ஊசிகள் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை CT ஸ்கான் முறைமூலம் மருத்துவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். உயர் வெப்ப அறைகளில் வெப்பநிலை 107 அல்லது 108 பாகை F வரை குறிக்கப்பட்ட நேரத்துக்கு வைக்கப்பச்ட்டுப் பின்னர் தணிக்கப்பட்டுவிடும். இப்படிப் பலதடவைகள் செய்யப்படும்.
இச்சிகிச்சை முறை இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. கதிரியக்க மற்றும் இரசாயன பதார்த்த சிகிச்சைகளுடன் செய்யப்படும்போது இது பலனளிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளாக வாந்தி, வயிற்றோட்டம் போன்றவை இருக்கலாம். எப்படியானாலும் இச்சிகிச்சை பற்றிய பூரணமான விளக்கமோ அல்லது அங்கீகாரமோ கிடைக்கும்வரை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று அதந்படி நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.