உமிழ்நீர்ப் பரிசோதனை மூலம் கொறோணாவைரஸைக் கண்டுபிடித்தல் – யேல் பலகலைக்கழகம் சாதனை
ஆகஸ்ட் 22, 2020 உமிழ்நீரைப் பரிசோதிப்பதன் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 நோய் தொற்றியிருக்கிறதா எனக்கண்டுபிடிக்கும் வழியொன்றை யே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகளுக்கான நிர்வாகம் (FDA) இதன் பாவனைக்கான அவசர அனுமதியை வழங்கியிருக்கிறது.
இதுவரை காலமும் மூக்கினுள் நுழைக்கபடும் பருத்திப் பந்தினால் எடுக்கப்படும் திரவத்தைப் பரிசோதிப்பதன்மூலமே (nasopharyngeal swab tests) கொறோணாவைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை உறுதிசெய்து வந்தார்கள். இப்பரிசோதனைக்காக ஒருவர் ஒரு கிண்ணத்துள் தனது எச்சிலைத் துப்பினால் போதுமானது.
யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ‘சலைவா டிறெக்ட்’ (SalivaDirect) எனப்படும் இப் பரிசோதனை குறைந்த செலவிலும், மிக விரைவாகவும் செய்யக்கூடியது எனக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கான நிதியை அமெரிக்க கூடைப்பந்துக் கழகம் (National Basketball Association) மற்றும் ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தைன் மேர்காட்டஸ் மையம் (Mercatus Center at George Mason University) ஆகியன வழங்கியிருந்தன.
‘திறந்த அனுமதி’ (Open Source)
இக்கண்டுபிடிப்பிலுள்ள விசேடம் என்னவென்றால், இக்கண்டுபிடிப்பு இலாபமீட்டும் நோக்கத்திற்காக நிறுவனங்களுக்கு விற்கப்படமாட்டாது. மாறாக “open source” நடைமுறையைப் பின்பற்றி இதன் தயாரிப்புக்கான அங்கீகார்ம் இலவசமாக வெளியிடப்படும். எந்த நாட்டிலுள்ள எந்தவொரு ஆய்வுகூடமும் தனது விருப்பத்துக்கமைய பரிசோதனைக் கருவிகளைத் தயாரித்துக்கொள்ளலாம்.
‘சலைவாடிறெக்ட்’ எப்படி வேலை செய்கிறது?
SARS-CoV-2 வைரஸின் உடலமைப்பு சவ்வினாலான உறைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் ‘ஸ்பகெட்டி’ அல்லது ‘நூடில்ஸ்’ சுருள் என்று உவமை கொள்ளலாம். இந்த சுருள் RNA எனப்படும் ஒருவகை மூலக்கூற்றாலானது. இச் சவ்வு அல்லது கோதை உடைத்து RNA யை வெளியில் எடுத்து அதைப் பரிசோதிப்பதன் மூலமே அது SARS-CoV-2 வைரஸ் ரகத்தினதா எனக் கண்டுபிடிக்கலாம். தற்போது கையாளப்பட்டுவரும் ‘மூக்குத் திரவப்’ பரிசோதனையும், யேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உமிழ்நீர்ப் பரிசோதனையும் இந்த RNA சுருளைத் தனிமைப்படுத்திய பின்பே அது SARS-CoV-2 வைரஸா என்பதைக் கண்டுபிடிக்கின்றன.
வித்தியாசம்
பழைய முறையில், மூக்குத் திரவத்தின் மாதிரி ஆய்வுகூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசேட இரசாயனப் பதார்த்தங்களின் உதவியுடன் RNA சுருள் தனிமைப்படுத்தப்படுகிறது. இதற்கு சில நாட்கள் பிடிக்கலாம். ஆனால் புதிய (யேல்) முறையில், உமிழ்நீர் ஒரு குறிப்பிட்ட நொதியத்துடன் (enzyme) சேர்த்து சூடாக்கப்படுவதன் மூலம் RNA சுருள் இலகுவாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இந் நொதியம் இலகுவில் பெறக்கூடிய ஒன்று.
இந்த இரண்டு பரிசோதனைகளும் ஒப்பிட்டுப் பார்த்தபோது 90 வீதத்துக்கு மேல் ஒரே பெறுபேறுகளைக் காட்டின எனக் கூறப்படுகிறது.
நன்மைகள்
- மூக்கிற்குள் நுழைக்கும் பருத்திப்பந்து, RNA யைத் தனிமைப்படுத்தும் விசேட இரசயானப் பதார்த்தங்கள் (reagents) தேவையில்லை. சாதாரண, கிருமியகற்றப்பட்ட பரிசோதனைக் குழாய்கள் / கலன்கள் போதும்
- பரிசோதனைக்கான நேரம் மிச்சம்பிடிக்கப்படுகிறது
- சுகாதார சேவையாளர் முன்னிலையில் நோயாளியே உமிழ்நீரை எடுத்துக் கொடுக்கலாம். இதனால் சுகாதார சேவையாளருக்கு நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைக்கப்படுகிறது.
- உமிழ்நீர்ப் பரிசோதனை ஒன்றை $10 இற்குள் செய்ய முடியும்.
- வீட்டில் வைத்துச் செய்யப்படும் கர்ப்பப் பரிசோதனைகள் போல இதுவும் ஒரு வீட்டிலேயே செய்யக்கூடிய பரிசோதனையாக முன்னேற்றம்காணும் வாய்ப்புக்கள் நிறையவுண்டு.
- பாடசாலைகளிலும், வேலைத்தலங்களிலும் இப் பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு
கனடா
கனடாவில் இப் பரிசோதனைக்கான வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. டயாகார்ட்டா எனும் நிறுவனமொன்று இதற்கான அனுமதிகோரி கனடிய சுகாதாரா அமைச்சிற்கு விண்ணப்பித்துள்ளது. தாம் இவ்விண்ணப்பத்தைப் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No related posts.