உணவு உறைகள் (packaging) மூலம் கொறோணாவைரஸ் பரவுமா?


கடைகளில் விற்கப்படும் உணவுபொருட்களின் உறைகளில் கொறோணாவைரஸ் இருந்ததாக சமீபத்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட இறால் மற்றும் கோழிக்கால் பொதிகளில் இவ்வைரஸ் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

உணவுறைகள் மூலம் வைரஸ் பரவும் சாத்தியமுண்டா?

கடினமான அட்டைகள் (cardboard), சில பிளாஸ்டிக் உறைகளில் வைரஸ் மணித்தியாலங்களுக்கு, சில சந்தர்ப்பங்களில் நாட்களுக்கு உயிரோடு இருக்கமுடியுமென ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைந்த வெப்பநிலையுள்ள சூழலில் இதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. உணவுப் பொதிகள் பெரும்பாலும் குளிர் கலன்களில் ஏற்றுமதி செய்யப்படுவதும், கடைகளில் குளிர்பெட்டிகளில் வைக்கப்பட்டிருப்பதும், இவ்வைரஸ் உயிர்வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கின்றன.

லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுவாச விஞ்ஞானப் பஏராசிரியர் டாக்டர் ஜூலியன் ராங், றட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் பேராசிரியர் இமானுவேல் கோல்ட்மான் ஆகியோர் இவ்விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆய்வுகூடத்தில் விஞ்ஞானிகள் 10 மில்லியன் வைரஸ்களை வைத்துத் தமது முடிபுகளை எடுக்கிறார்கள் ஆனால் உண்மையில் ஒரு துளி தும்மல் ஒரு பொருளில் படியும்போது அதில் ஏறத்தாள 100 வைரஸ்கள் மட்டில்தான் இருக்கும். மாறுகின்ற வெப்பநிலைகளில் இவை உயிர் பிழைக்க மாட்டா என்பதுவே இந் நிபுணர்களின் அபிப்பிராயம். நோய்த் தொற்றுள்ள ஒருவர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ வெளிப்படும் திரவத் துணிக்கைகள் படிந்து அதை ஓரிரு மணித்தியாலங்களுக்குள் மற்றவர்கள் தொட்டுக்கொள்ளும்போதே வைரஸ் தொற்றிக்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது என்கிறார் பேராசிரியர் கோல்ட்மன்.

அமெரிக்க நோய்த்தடுப்பு மையத்தின் (Centre for Disease Control) இணையத்தளத்தில் குரிப்பிட்டுள்ளபடி, உயிரற்ற பொருட்கள் மூலம் வைரஸ் பரவுதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தாலும், மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் முறையே பெரும்பாலான தொற்றுகள் ஏற்பட்டதற்குக் காரணம் என அது தெரிவிக்கிறது.

உலக சுகாதார நிறுவனமும், உணவுறைகள் மூலம் வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறுகிறது. இருப்பினும் இது குறித்து மக்கள் அனுசரிக்கவேண்டிய முன்னெச்ச்சரிக்கைகள் பற்றி அது ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

உணவுப் பொதிகளைக் கிருமியகற்ற வேண்டிய தேவையில்லை எனவும் ஆனால் அவற்றைக் கையாள முதலும் உணவருந்த முன்னரும், கைகளைக் கழுவிக் கொள்ளுதல் அவசியமெனவும் அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

பெரும்பாலான தொற்றும் முறைகள்

  • தொற்றுக் கண்ட ஒருவரின் 6 அடி (2மீட்டர்) சுற்றளவுக்குள் ஒருவர் போவதன் மூலம்
  • நோய்த் தொற்றுள்ள ஒருவர் தும்முதல், இருமுதல் அல்லது பேசுதலின்போது
  • நோய்த்தொற்றுள்ள ஒருவரின் எச்சில் அல்லது உடல் திரவம் இன்னுமொருவரின் வாய், மூக்கு போன்ற துவாரங்களின் மூலம் அவரது உடலுள் போகும்போது

எனப் பல வழிகள் மூலம் வைரஸ் ஒருவரது உடலுள் புகுந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

Print Friendly, PDF & Email