உங்களுக்கு தசைப்பிடிப்பு (cramps) இருக்கிறதா?

அகத்தியன்

முதியவர்களில், குறிப்பாக பெண்களில், 60 வயதை அண்மியதும் தசை, நாரிப் பிடிப்பு, கணுக்காலில் தசை இறுக்கம், முதுகு கூனல் என்று பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பலரும் இவ்வறிகுறிகளை “வயது வந்திட்டுது தானே” என்று இலகுவாகக் கடந்துபோய்விடுவது வழக்கம். வாழ்வியல் பழக்கங்கள் இதற்கு ஒரு காரணமாக இருப்பினும் இவற்றில் சிலவற்றை உணவு மற்றும் சிகிச்சைகளின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

கல்சியம் என்னும் மூலகம் உடலின் சீரான இயக்கத்திற்கு பலவழிகளிலும் முக்கியமான ஒன்று. ஆனால் இது உடலின் பலமான எலும்புக்கு அவசியமானது என்று மட்டுமே பலர் அறிந்து வைத்திருந்தாலும் நரம்புத் தொகுதி, தசைகள், இரத்த உறைவு மற்றும் சீரான இருதயத் துடிப்பு ஆகியவற்றுக்கும் கல்சியம் அவசியமான ஒன்று என்பது பலருக்கும் தெரிந்திருக்க் வாய்ப்பில்லை.

உடம்பில் (குருதியில்) கல்சியக் குறைபாட்டை ஹைபோகல்சீமியா (hypocalcemia) எனவும் அதிகமாக இருந்தால் அதை ஹைப்பெர்கல்சீமியா (hypercalcemia) எனவும் அழைப்பர். இதற்கு காரணம் குருதிக் கல்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் பராதைறோயிட் ஹோர்மோன் (Parathyroid Hormone (PTH)) மற்றும் கல்சிரோணின் (calcitonin) அளவு மாறுபடுவதனாலாகும்.

உடலின் சீரான இயக்கத்திற்குத் தேவையான அத்தனை மூலகங்களையும் உடல் உணவுவழியாகக் குருதிக்குள் எடுத்து கலங்களுக்கு வழங்குகிறது. ஆனாலும் கலங்கள் தமக்குத் தேவையான அளவை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதியைக் குருதியில் விட்டுவிடுகின்றன. நாம் சாப்பிடும் உணவிலிருந்து கலங்கள் சர்க்கரையை எடுத்து எரித்து சக்தியைத் தருவது போலவே கல்சியத்தையும் எடுத்து தனது தேவைகளுக்குப் பாவிக்கிறது. கலங்களுக்குத் தேவைப்படாத எச்சமான குருதிச் சர்க்கரை (blood sugar), தொடர்ச்சியாக அதிக அளவில் இருந்தால் அதை ஹைப்பெர்கிளசீமியா (hyperglacemia) எனவும் குறைவாக இருந்தால் அதை ஹைபோகிளசீமியா எனவும் அழைப்பர்.

கலத்திற்குள் சர்க்கரையை உள்ளெடுக்கும் பாதையை இன்சுலின் என்ற ஹோர்மோன் திறந்துவிடுகிறது. சதையத்தினால் சுரக்கப்படும் இந்த இன்சுலின் அளவிலோ தொழிற்பாட்டிலோ மாறுபாடு இருப்பின் கலம் உள்ளெடுக்கும் சர்க்கரையின் அளவு பாதிக்கப்படுகிறது. இதன்போது குருதியில் எஞ்சும் சர்க்கரையின் அளவை வைத்தே ஹைபோ / ஹைபெர் கிள்சீமியா எனத் தீர்மானிக்கப்படுகிறது. குருதியிலுள்ள கல்சியத்தின் நிலைமையும் இப்படித்தான். கல்சியத்தைக் கலத்துக்குள் உள்ளெடுப்பதற்கும் சில பாதைகள் உள்ளன. அவை பாதிக்கப்படும்போது குருதியில் கல்சியத்தின் அளவு கூடிக் குறைகிறது (ஹைபோ / ஹைப்பெர்). குருதியில் கல்சியம் அதிகமாகத் தேக்கமடையும்போது அது குருதியூடு சென்று இதர அங்கங்களையும் பாதிக்கிறது. இதுபோலவே துத்தநாகம் ((zinc), பொட்டாசியம் (pottasium), மக்னீசியம் (magnesium) என்று இதர பல மூலகங்களின் பற்றாக்குறையும், எச்சங்களும் பலவிதமான அறிகுறிகளுக்கும் காரணமாகின்றன.

கல்சியக் குறைபாட்டின் அறிகுறிகள்

உடலின் சீரான இயக்கத்திற்கு மற்றெல்லா மூலகங்களை விடவும் கல்சியம் மிக முக்கியமானது. இரத்தத்திலுள்ள கல்சியத்தின் அளவு மிகவும் குறைவாகப் போகும் போது அது ஹைபோகல்சீமியா என அழைக்கப்படுகிறது. இதன் அளவைக் கட்டுப்படுத்துவது பராதைறோயிட் ஹோர்மோன், கல்சிரோணின், வைட்டமின் டி ஆகியனவாகும். கல்சியக் குறைபாட்டின் அளவுகளுக்கேற்ப அறிகுறிகளின் தன்மையும் வேறுபடும். சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் இருக்கும். எலும்புகளில் இது சேமித்துவைக்கப்பட்டாலும் போதுமான அளவு இரத்தத்திலும் இருக்கவேண்டும்.

நரம்புகள் தகவல்களை சீராகக் கடத்தவும், தசைகள் தேவையானபோது சுருங்கி விரிந்து அங்கங்களை இயக்கவும், தேவையான போது குருதி உறைந்து காயங்களை மூடவும், இருதயத்தின் செயற்பாட்டை நிர்வகிக்கவும் கல்சியம் மிகவும் அவசியமான ஒன்று. அதேவேளை எலும்புகளைப் பலத்தோடு பராமரிக்கவும் கல்சியம் அவசியம். உணவில் சர்க்கரை (கார்போகைட்றேட்) இல்லாதபோது எவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பு சர்க்கரையாக மாறுகிறதோ அதேபோல உணவிலிருந்து போதுமான கல்சியம் கிடைக்காதபோது உடல் தனக்குத் தேவையான கல்சியத்தை எலும்புகளிலிருந்து எடுத்துக்கொள்கிறது.

கல்சியக்குறைபாடு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. ஒரு குழந்தைக்கு ஹைப்போகல்சீமியா இருக்கிறதென்றால் அது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட குறைபாடாக இருப்பதுண்டு. தைறோயிட் சுரப்பி அகற்றப்பட்டவர்களுக்கு பக்கவிளைவாக ஹைபோகல்சீமியா இருப்பது வழக்கம்.

அறிகுறிகள்

சிறிதளவில் ஹைபோகல்சீமியா இருப்பவர்களுக்கு (mild) அறிகுறிகள்:

 • தசைப்பிடிப்பு (muscle cramps) , குறிப்பாக முதுகு, கால்களில்;
 • உலர் , செதில் தோறமுள்ள அருமம் (dry, scaly skin)
 • உடையும் நகங்கள் (brittle nails)
 • அடர்த்தியற்ற தலைமுடி (coarse hair)

சிகிச்சை செய்யப்படாது நாட்பட்ட ஹைபோகல்சீமியா உள்ளவர்களுக்கு நரம்புத் தொகுதி பாதிப்பினால் பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்:

 • புத்தி தடுமாற்றம் (confusion)
 • மறதி (memory problems)
 • எரிச்சல் மற்றும் பொறுமையின்மை (irritability or restlessness)
 • மன அழுத்தம் (depression)
 • பிரமை (hallucinations)

ஆகியன அறிகுறிகளாகத் தென்படலாம்

இரத்தத்தில் மிக மோசமாக கல்சியக் குறைபாடு (ஹைபோகல்சீமியா) இருப்பவர்களுக்கு :

 • உதடுகள், நா, விரல்கள், பாதங்கள் போன்ற உறுப்புகளில் கூசுவது போன்ற (tingling) போன்ற உணர்வு
 • தசைகள் வலித்தல் (muscle pain)
 • தொண்டைக்குள் தசையிறுக்கம் (muscle spasm); சுவாசிப்பதில் சிரமம்
 • தசை விறைப்பு (stiffening or spasms (tetany))
 • வலிப்பு (seizures)
 • சீரற்ற இதயத் துடிப்பு (abnormal heart rhythms (arrhythmia))
 • இருதய செயலிழப்பு (congestive heart failure)

ஆகியன அறிகுறிகளாக இருக்கலாம்.

கல்சியக் குறைபாட்டிற்குக் காரணமென்ன?

குருதியிலும் எலும்புகளிலும் சரியான அளவு கல்சியத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உடலின் செயற்பாடு மிகவும் சிக்கலானது. பெரும்பாலான தருணங்களில் உடலில் சுரக்கப்படும் பராதைறோயிட் ஹோர்மோனின் அளவும், வைட்டமின் டி யின் அளவும் மாறுபடுவதே கல்சியக் குறைபாட்டிற்குக் காரணம் என மருத்துவ உலகம் கருதுகிறது. இவற்றில் பராதைறோயிட் ஹோர்மோன் குருதியிலுள்ள கல்சியத்தின் அளவையும், வைட்டமின் டி கலங்கள் எவ்வளவு கல்சியத்தை உள்ளெடுக்கின்றன என்பதையும் தீர்மானிக்கின்றன.

கல்சியக் குறைபாட்டிற்குக் காரணமெனக் கருதப்படும் பொதுவான மூன்று காரணங்கள்:

 • ஹைபோபராதைறோயிடிசிம் (hypoparathyroidism): எங்கள் தாடைக்குக் கீழ் இருக்கும் தைறோயிட் சுரப்பிக்குப் பின்னால் இருக்கும் நான்கு அவரைவிதை அளவிலான சுரப்பிகளே பராதைறோயிட் சுரப்பிகள். இவற்றின் சுரப்பில் குறைபாடு காணப்படுமாகில் அதை ஹைபோபராதைறோயிடிஸ்ம் என்பார்கள். இச்சுரப்பிகளில் ஏதாவது அசாதாரண செயற்பாடுகள் காணப்பட்டால் அதை / அவற்றைச் சிகிச்சையினால் அகற்றிவிடுவது வழக்கம். இதனாலும் ஹைபோபராதைறோயிடிஸ்ம் ஏற்பட வாய்ப்புண்டு.
 • வைட்டமின் ட் பற்றாக்குறை: ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல கலத்தின் சுவர்களுக்குள் கல்சியத்தை உள்ளெடுக்கும் செயற்பாட்டைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய பதார்த்தமாக வைட்டமின் டி இருக்கிறது. இதில் நாம் உண்ணும் உணவிலிருந்து 10-15% கல்சியம் குருதியில் சேர்க்கப்படுகிறது. வைட்டமின் டி குளிசைகளை (supplements) எடுப்பதன் மூலம் இதன் கல்சியத்தின் உள்வாங்கல் 30-40% வரை அதிகரிக்கிறது எனப்படுகிறது.
 • சிறூநீரக செயற்பாட்டிழப்பு: கல்சியக் குறைபாட்டின் காரணமாக குருதியில் பொஸ்பரஸின் அளவு அதிகரிப்பதனால் சிறுநீரகத்தினால் சுரக்கப்ப்டும் ஒரு வகை வைட்டமின் டி குறைவடைகிறது. இதனால் சிறூநீரகத்தின் தொழிற்பாடு பாதிக்கப்படுகிறது.

மேலதிக காரணங்கள்:

 • கோர்ட்டிகோ ஸ்ரெறோயிட்டுகள் (corticosteroids), பிலீகாமைசின் (plicamycin) போன்ற சில மருந்துகள்
 • சூடோஹைபோதைறோயிடிஸ்ம் எனப்படும் பரம்பரையாக தொடரும் வியாதி
 • குருதியில் மக்னீசியத்தின் அளவு குறைதல் (ஹைபோமக்னீசியா)
 • பங்கிறியாற்றிறிஸ் ( pancreatitis) எனப்படும் சதைய அழற்சி. இவ்வியாதி உள்ளவர்கள் 15-88% வரை கல்சியக்குறைபாட்டுக்குள்ளாகிறார்கள்

பரிசோதனைகள்

இரத்தப் பரிசோதனை: இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலம் குருதியிலுள்ள அளவைத் தீர்மானிக்க முடியும். உங்களுக்கு கல்சியக் குறைபாடு இருக்கிறதென உங்கள் மருத்துவர் சந்தேகித்தால் அவர் இப்பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். வழக்கமாக ஒருவரது குருதியில் 8.6-10.3 mg/dL கல்சியம் இருக்கவேண்டும். அதே வேளை உங்கள் குருதியில் இருக்கும் மக்னீசியம், பொஸ்பரஸ், பராதைறோயிட் ஹோர்மோன் ஆகியவற்றைன் அளவுகளையும் பரிசோதித்து அறிவதன் மூலம் உங்களுக்கு ஹைபோகல்சீமியா இருக்கிறதா என்பதை உங்கள் மருத்துவரால் தீர்மானிக்க முடியும்.

எலெக்ட்றோகார்டியோகிராம் (electrocardiogram (EKG)): உங்கள் மார்பில் மின்னிணைப்புகளை இணைத்து இருதயம் சீராக இயங்குகிறதா என்பதை அவதானிப்பதன் மூலம் உங்களுக்குக் கல்சியக் குறைபாடு இருக்கிறதா என்பதை மருத்துவரால் தீர்மானிக்க முடியும். கல்சியக் குறைபாடு இருப்பவர்களுக்கு இருதயத் துடிப்பு சீராக இருக்காது.

எலும்புப் பரிசோதனை: எலும்பிலுள்ள கல்சியத்தின் அடர்த்தி குறைவாக இருப்பின் எலும்புகள் இலகுவில் முறிந்தோ அல்லது வெடித்தோ போகிறது. ஒஸ்ரியோமலாசியா அல்லது றிக்கெட்ஸ் என இதை அழைப்பார்கள். இதற்கு காரணம் எலும்பில் கல்சியச் சேர்க்கை குறைவாக இருப்பது அல்லது குருதியில் கல்சியம் குறைவாக இருக்கும்போது எலும்பிலுள்ள கல்சியம் குருதியின் தேவைக்காக எடுக்கப்பட்டுவிடுவது. பெண்களுக்கு மாதவிடாய் நின்று முதல் 5 வருடங்களுக்குள் 10% கல்சியம் இழக்கப்படுகிறது. இதன் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வாழ்க்கையில் ஒரு தடவையாவது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு எனக் கூறப்படுகிறது.

சிகிச்சை

 • கல்சியக் குளிசைகள்: கல்சியக் குறைபாட்டிற்கு சிகிச்சையாக வாய் மூலம் எடுக்கும் கல்சியக் குளிசைகளையே பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் குருதியில் சேர்க்கப்படும் மேலதிக கல்சியத்தினால் வரக்கூடிய தீங்குகளும் அதிகம் என்பதால் மருத்துவரினால் பரிந்துரைக்கப்பட்ட உரிய பரிசோதனைகளைத் தொடர்ந்து அவரினால் பரிந்துரைக்கப்படும் அளவில் தான் இக்குளிசைகள் உள்ளெடுக்கப்படவேண்டும்.
 • வைட்டமின் டி: கல்சியக் குளிசைகளிலிருந்து கல்சியத்தை உள்ளெடுக்க உதவி செய்வது வைட்டமின் டி. எனவே இரண்டு குளிசைகளையும் சேர்த்து எடுக்கும்படி சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இங்கும் எடுக்கவேண்டிய மருந்துகளின் அளவுகள் பற்றிக் கவனத்தில் எடுக்க வேண்டும்.
 • தயாரிக்கப்பட்ட பராதைறோயிட் ஹோர்மோன் (synthetic PTH): ஹைபோகல்சீமியா இருக்கலாமென உங்கள் மருத்துவர் சந்தேகப்பட்டால் ஆய்கூடத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஹோர்மோனையும் அவர் பரிந்துரைக்கலாம்.
 • ஐ.வி. கல்சியம் குளுகோனேற் (IV calcium gluconate): உங்களுக்கு தசைப் பிடிப்பு, தசை இறுக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் இரத்தம் மூலம் இந்த மருந்தை ஏற்றுவதற்குப் பரிந்துரைப்பார்.

இருப்பினும் கல்சியக் குறைபாட்டுக்கென நீங்கள் எடுக்கும் மருந்துகள் அதேயளவுக்கு தீங்குகளையும் விளைவிக்கக்கூடியவை என்பதையும் மனதில் வைத்திருக்கவேண்டும். கல்சியக் குறைபாட்டுக்கென பலர் தாமாக எடுக்கும் குளிசைகளினாலோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளினாலோ குருதியில் கல்சியத்தின் அளவு கூடுவதால் நாடிகளில் கல்சியப்படிவு, சிறூநீரகப் பாதிப்பு எனப் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் மனதில் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாது குளிசைகளை எடுக்கவேண்டாமென்பது எமது ஆலோசனை.

அடுத்த கட்டுரையில் குருதியில் மிகையான கல்சியத்தால் வரும் பாதிப்பு பற்றி… (Photo by Afif Ramdhasuma on Unsplash)

Print Friendly, PDF & Email