உங்களுக்கு ஏற்கெனவே கோவிட்-19 நோய் தொற்றியுள்ளதா? இரத்த பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்

உங்களை அறியாமலே உங்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று வந்து தப்பியிருக்க வாய்ப்புண்டா? நோய்த் தொற்று வந்திருக்கவும் வாய்ப்புண்டு. தப்பியிருக்கவும் வாய்ப்புண்டு. அதே வேளை இரத்தப் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளவும் வாய்ப்புண்டு என்கிறது அமெரிக்க தேசிய சுகாதார இன்ஸ்டிடியூட் ஆய்வு ஒன்று.

ஒருவருக்கு நோய்த்தொற்று வரும்போது உடலுக்குள் புகுந்துகொள்ளும் அன்னிய எதிரியை (pathogen) தேடி அழிக்கவென உடலினால் தயாரிக்கப்படும் ‘காவலர்களுக்கு’, எதிர்ப் பொருள் (immunoglobulin / antibody) என்று பெயர். ஒவ்வொரு எதிரிக்குத் தக்கனவாக அவை உற்பத்தி செய்யப்படுவதால் (pathogen specific antibodies) அவை ஒவ்வொன்றும் தனிதன்மையானவை. எனவே உங்கள் உடலுக்குள் SARS-CoV2 வைரஸ் நுழைய முயன்று, அது வெற்றிகரமாக அடித்து விரட்டப்பட்டிருந்தால், அதை விரட்டிய காவலர்களான ‘எதிர்ப்பொருட்கள்’ உங்கள் இரத்தத்தில் தொடர்ந்தும் இருக்கும். அவை இருகின்றன்றன் என்று இரத்தப் பரிசோதனையில் தெரியுமானால் உங்களுக்குத் தொற்று வந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.

ஆனால், அவசரப்பட வேண்டாம். இந்த ஆய்வைச் செய்த தேசிய சுகாதார இன்ஸ்டிடியூட் இப்போதுதான் தன் வேலையை ஆரம்பித்திருக்கிறது. இதற்காக 10,000 தொண்டர்களை அவர்கள் சேர்க்கவிருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் எங்கும் வசிக்கலாம். நிபந்தனைகள் இரண்டு: ஒன்று அவர்களுக்கு கோவிட்-19 தொற்று வந்திருக்கக் கூடாது அதே போல், நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளையும் கொண்டிருக்கக் கூடாது.

இதன் மூலம், எத்தனை பேர் நோய்த் தொற்று வந்திருந்தும் அதைத் தெரியாமலேயே நடமாடுகிறார்கள் என்பதை இலகுவாக அறிந்துவிடலாம். அமெரிக்காவின் உண்மையான நோய்த் தொற்று / பரவல் நிலையை அறிவதற்கு இப்படியான பரிசோதனைகளே உதவி செய்யும் என அமெரிக்காவின் தொற்றுநோய்கள் மற்றும் ஒவ்வாமை தேசிய இன்ஸ்டிடியூட்டின் தலைவரான டாக்டர் அந்தோனி ஃபெளச்சி தெரிவிக்கிறார்.

இதே வேளை, அமெரிக்காவின் நோய்த் தொற்று வீதமும், இறப்பு வீதமும் அதிகரித்த வண்னமே இருக்கின்றன. இன்றய கணக்கின்படி உலகின் தொற்று எண்ணிக்கை , 1.7 மில்லியனைத் தண்டுகிறது, அவர்களில் 500,000 அமெரிக்கர்கள். இதில் நோயினின்றும் தப்பியவர்கள் 376,000. மரணமடைந்த கோவிட்-19 நோயாளிகளில் பெரும்பகுதியினர் மருத்துவ வசதி கிடைக்காதவர்களும், வறியவர்களும் எனப்படுகிறது. இப்படியானவர்கள் பெரும்பாலும் கறுப்பின மக்கள் என்பது தெரிந்த விடயம். அமெரிகாவில் கறுப்பின மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் தான் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவிருக்கிறது ஆனால் அவை புள்ளி விபரங்களை அலங்கரிப்பதில்லை. 

Print Friendly, PDF & Email