இளமையை மீளப்பெற முடியும் – உயிரியல் கடிகாரத்தைப் பின்னோக்கிச் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை!

அகத்தியன்

கலங்கள் மூப்படையும்போது அவற்றின் மரபணுக்களில் சேர்க்கையடையும் பல்லாயிரக் கணக்கான இரசாயனப் பதார்த்தங்களை அகற்றி அக் கலங்களைப் புத்துணர்வு பெறச் செய்து ‘இளமையாக்குவதன்’ மூலம் இழந்த இழமையை மீளப் பெறமுடியுமென விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர்.

டிசம்பர் 2 இல் வெளிவந்த ‘இயற்கை’ (Nature) சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையில் இவ் விடயம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. லா ஹோலா, கல்போர்ணியாவிலுள்ள உயிரியல் கல்விகளுக்கான சால்க் இன்ஸ்டிடியூட் (Salk Institute for Biological Studies) ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த உயிரியலாளர் ஹுவான் கார்லோஸ் இஸ்பீசுவா பெல்மோண்டே இதுபற்றிக் குறிப்பிடுகையில், “மூப்படையும் கலங்களைப் புத்துணர்வு செய்வதன் மூலம் அவற்றின் தம்மைத்தாமே செப்பனிடும் பணியை மீள உருவாக்கி விடமுடியும் என்பதை எலிகளில் செய்த பரிசோதனைகள் நிரூபித்துள்ளன” என்கிறார். இப் பரிசோதனைகள் எலிகளில் வெற்றியைத் தந்துள்ளன ஆனால் மனிதரில் இவை வெற்றியைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பதையும் அவர் எச்சரித்தார்.

ஒருவருடைய உடற் கலங்கள் மூப்படையும்போது பலவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன. வயது அதிகரிக்க இம் மாற்றங்களும் அதிகரிக்கின்றன. இறந்துபோகும் கலங்களை மீளீடு செய்யும் இயற்கையான நிகழ்வின்போது, இவை தம்மைப் போன்ற பிரதிகளையே செய்துகொள்வதால் இளமையில் இருந்து புத்துணர்வு படிபடியாக இழக்கப்படுகிறது. இதுவே முதுமை எனப்படுகிறது.

இப்படி மாற்றமடைந்த கலங்களைச் செப்பனிட்டு ‘இளமையிலிருந்த நிலைக்குக்’ கொண்டுவந்தால் அவை உருவாக்கும் புதிய கலங்களும் இளமையானவையாக இருக்கும். இக் கலங்கள் ஒருவருடைய இழையங்களையும், உறுப்புகளையும் புதுப்பித்துக் கொள்வதால் அவற்றின் செயற்பாடுகளும் இளமை நிலைக்குச் செல்கின்றன என்பதே இவ்வாராய்ச்சியின் பின்னணி.

எலிகளில் பரிசோதனை

கருத்தரிப்பு நிலையில் உள்ள ஒருவருடைய முளைநிலைக் கலங்கள் (stem cells) வளர்ச்சியின்போது அந்தந்த உறுப்புகளின் தொழிற்பாட்டை நிர்ணயிக்கும் கலங்களாக மாற்றம் பெறுகின்றன. அவ்வுறுப்புகளின் கலங்கள் இறந்துபோகும்போது இறந்த கலங்களையொத்த புதிய கலங்கள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாராய்ச்சியாளர்கள் எலிகளில் செய்த ஆராய்ச்சியில் சில உறுப்புகளிலுள்ள மூப்படைந்த கலங்களின் மரபணுக்களை முளைக்கலங்களின் நிலைக்கு மாற்றம் செய்தனர். அவை அந்த உறுப்புகளை இளமை நிலைக்கு மாற்றுவதை அவர்கள் அவதானித்தனர். இப்படியாக மூப்பினால் பார்வையை இழந்த எலிகளில் அவர்கள் பார்வையை மீளச் செயற்பட வைத்தனர்.

ஆபத்து

இச் செயற்பாடினாம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் விஞ்ஞானிகளால் அறிந்துகொள்ள முடிந்தது. அதாவது மூப்படைந்த கலங்களைப் போலல்லாது முளைக் கலங்கள் சிலவேளைகளில் வேகமாகப் பிரிவடையத் தொடங்கினால் அது புற்றுநோயாக மாறிவிடுகிறது. எனவே இவ்வுறுப்புக்களின் செயற்பாடு மீளப் பெறப்பட்டதும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு இம்மரபணுச் செப்பனிடுதலை நிறுத்திவிட வேண்டும். இச் செயற்பாட்டை எப்படி முடுக்கி விடுவது எப்படி நிறுத்துவது என்பதுவே இப்போதுள்ள்ள கேள்வி.

மரபணு முடுக்கி (Genetic Switch)

இக் கேள்விக்கான விடையைத் தருகிறார் மரபணு விஞ்ஞானியான யுவான்செங் லூ. இளமையை மீளக்கொணரும் நான்கு மரபணுக்களை பெல்மொண்டே குழுவினர் தனிமைப்படுத்தியிருந்தனர். இவற்றில் ஒன்று புற்றுநோயைத் தருகிறது எனபதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மிகுதியான மூன்று மரபணுக்களையும் லூ, ஒரு வைரஸின் உடலுட் புகுத்தி அதை மனித உடலுக்குள் செலுத்தி விட்டார். வழமைபோல இவ் வைரள் மனிதக் கலங்களுக்குள் புகுந்து அக்கலங்களை மாற்றி ‘இளமையைப்’ புத்துணர்வு செய்துகொண்டது. இதே போல தனிமைப்படுத்தப்பட்ட ‘இளமை’ மரபணுக்களை மருந்தொன்றுடன் சேர்த்துக் கொடுத்து கலங்களினுட் செலுத்துவதன் மூலமும் இதே மாற்றங்களைப் பெற்றுக்கொண்டார். மருந்து கொடுப்பதை நிறுத்தியதும் கலங்கள் மீண்டும் தமது பழையநிலைக்குச் சென்றுவிட்டன. இப் பரிசோதனைகள் மூலம் சில கலங்களை விரும்பியவாறு, விரும்பிய காலத்துக்கு முடுக்கிவிட முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

எலிகளில் கண்பார்வையை மீளப் பெறுதல்

பாலூட்டிகளில் காணப்படும் இன்னுமொரு தன்மை மத்திய நரம்புத் தொகுதியில் இழக்கப்படும் கலங்களைச் செப்பனிடும் செயற்பாட்டை அவை இளமையிலேயே இழந்துவிடுவது. இவ்விடயத்தைக் குறிவைத்து லூவும் அவரது குழுவினரும் இன்னுமொரு ஆராய்ச்சியைச் செய்தனர். மேலே குறிப்பிட்டது போல, மூன்று மரபணுக்களையும் வைரசினுள் செலுத்தி எலியின் விழித்திரை நரம்புக் கலங்களில் (retinal nerves) செலுத்தினர். இவ்வெலியின் விழித்திரை நரம்புகள் காயப்பட்டதால் செயற்பாட்டை இழந்திருந்தன. இப்படியான பரிசோதனையை வேறெந்த விஞ்ஞானியும் முன்னர் செய்திருக்கவில்லை.

வைரஸ்களின் மூலம் கலங்களைச் சென்றடைந்த மரபணுக்கள் காயப்பட்டுச் செயலிழந்திருந்த கலங்களைப் புதுப்பித்ததை லூவும் குழுவினரும் பார்த்து அதிசயித்துப் போய்விட்டனர்.

கண்களில் ஏற்படும் குளொக்கோமா வியாதிக்குத் தீர்வு

இதன் பின்னர், இதே பரிசோதனையை முதுமையினால் பார்வையை இழந்திருந்த எலிகளில் செய்துபார்த்தனர். அத்தோடு கண்களில் ஏற்படும் குளோக்கோமா (glaucoma) எனப்படும் அழுத்த அதிகரிப்பைச் செப்பனிடவும் இதே முறையைப் பயன்படுத்தி வெற்றிகண்டனர். அத்தோடு இதே மரபணு முறையைப் பாவித்து மூப்படைந்த எலிகளில் இளமையைத் திரும்பச் செய்துள்ளனர் லூவும் அவரது குழுவினரும்.

மேலும் ஆராய்ச்சி

இம் மரபணு மூலம் உறுப்புக்களைச் செப்பனிடுதல், இளமையை மீளப்பெறுதல் போன்ற செயற்பாடுகள் மனித உடல்களில் எப்படி செயற்படும், அவை பாதுகாப்பானவையா என அறிய ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இதற்கான அனுமதியை பொஸ்டன் லைஃப் சயன்ஸெஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. இழந்த பார்வையை மீளப் பெறுவதில் இது ஒரு முன்னோடியான சிகிச்சை எனினும், மனிதரில் இச்சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கு முன்னர், இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டுமென சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கண் பார்வை தொடர்பான விஞ்ஞானியான போரொண்ட் றொஸ்கா தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email