இரத்தம் கட்டியாகுதலே கோவிட்-19 மரணங்களுக்கு முக்கிய காரணம்

பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பு

அகத்தியன்

கோவிட்-19 தொற்றின் பரபரப்பான ஆரம்ப நாட்களில் SARS-CoV-2 வைரஸினால் மனிதரில் ஏற்படும் தாக்கம் பொதுவாக சுவாசப் பைகள் மீதே இருந்ததென மருத்துவ சமூகம் நம்பிக்கொண்டு அதற்கான சிகிச்சை முறைகளையும் வடிவமைத்திருந்தது.

இதற்குக் காரணம் இவ் வைரஸின் முன்னோடியான SARS-CoV சுவாசப் பைகளைத் தாக்கி நிமோனியாவின் அறிகுறிகளைக் காட்டியிருந்ததுமாக இருக்கலாம். சுவாசப் பைகளில் திரவம் நிரம்புவதால் உடலுக்குத் தேவையான அளவு ஒக்சிசன் குறைக்கப்படும்போது மரணங்கள் ஏற்படுவது வழக்கம். இதனால் தான் நோயாளிகளுக்கு செயற்கைச் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன. ஆனாலும் இக் கருவிகள் பொருத்தப்பட்ட பல நோயாளிகள் பலரும் இந் நோயிலியிருந்து தப்பவில்லை என்ற உண்மை படிப்படியாகத் தெரியவந்தது.

நோய்க் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்திகொண்டிருந்த அரசாங்கங்களும், மருத்துவ சமூகங்களும் வழிகாட்டல்களுக்காக உலக சுகாதார நிறுவனம் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு மையம் போன்றவற்றையே நம்பி இருந்தன. இப் புதிய வைரஸ் பற்றியும் நோயறிகுறிகள் பற்றியும் அதிகம் அறிந்திருந்த சீனாவும், அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக தகவல்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உணடு. ஆனால் பல மேற்கு நாடுகளிலுள்ள மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் தத்தம் தேடலின் நிமித்தமும், இதர காரணங்களுக்காகவும் தனித்தனியே பரிசோதனைகளைச் செய்து வந்தன. இப்படியொருவர் தான் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிகேர்ட் லாக்ஸ் என்னும் மரண விசாரணை அதிகாரி. அவரது பரிசோதனை அனுபவங்கள் இப் புதிய வைரஸின் குணாதிசயம் முந்திய வைரஸைப் போலல்லாது வித்தியாசமாக இருந்ததை முதலில் வெளிப்படுத்தின.

‘தி சயன்ரிஸ்ட்’ என்ற சங்சிகை அவரைச் சமீபத்தில் பேட்டி கண்டு அவரது அவரது அனுபவங்களைப் பிரசுரித்திருக்கிறது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள் சில இங்கே தரப்படுகின்றன.

பேராசிரிய சிகேர்ட் லாஸ்க்

பிரேத பரிசோதனையின்போது லாக்ஸ் இறந்தவர்களின் உடல்களை, அவர்கள் இறந்து 48 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை செய்துவிடுவார். மார்ச் மாதம் நடுப்பகுதியில் அவர் இப்படியான பரிசோதனைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். அவரது வேலை இப் புதிய வைரஸின் உடலில் இருக்கும் RNA, மனித உடலில் என்தெந்த உறுப்புகளுக்கெல்லாம் சென்றிருக்கிறது (தொற்றியிருக்கிறது) என்பதை ஆராய்வதே. இவரும், இவரது சக பரிசோதனையாளர்களுமாகச் செய்த 11 பரிசோதனைகளின்போது பெறப்பட்ட தகவல்களை Annals of Internal Medicine என்ற சஞ்சிகையில் வெளியிட்டிருக்கின்றனர்.

சிகேர்ட் லாக்ஸ் ஜொஹான்னெஸ் கெப்ளெர் பல்கலைக்கழகத்தில் நோயியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ‘தி சயன்ரிஸ்ட்’ உடனான பேட்டியின் சில பகுதிகள் இங்கே தரப்படுகிறது.

கே: பிரேத பரிசோதனைகளின் போது நோயாளிகளில் நீங்கள் எப்படியான உறுப்புப் பாதிப்புகளை அவதானித்தீர்கள்?

ப: இரண்டு சுவாசப் பைகளும் சமமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. சுவாசப் பைகளின் நுண்ணிய காற்றுப் பைகளே (alveoli) பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தன. சுவாசப் பைகளைச் சுற்றியிருக்கும் இரட்டைச் சுவர்களினாலான சவ்வில் அழற்சியோ (inflammation), திரவச் சேர்க்கையோ பெரிதளவில் காணப்படவில்லை. பெரும்பாலானவர்களின் இருதயங்கள் வீக்கமுற்றிருந்தன (dilated).

கே: உங்கள் அறிக்கையில் பல நோயாளிகளின் சுவாசப்பை நாடிகளில் இரத்தக் கட்டிகளைக் கண்டதாகக் கூறியுள்ளீர்கள். அதன் முக்கியத்துவம் என்ன?

ப: சுவாசப் பைகளின் வெளிப்பரப்பிலுள்ள பல நாடிகளில் இரத்தக் கட்டிகள் உருவாகி இரத்தோட்டம் தடைப்பட்டிருந்ததை அவதானித்தோம். இக் கட்டிகள் நாடிகளின் சுவர்கள் காயப்படுதலினால் ஏற்படும் (thrombotic) வகையினதாக இருந்தனவே தவிர, உடலின் வேறு பகுதிகளில் (உதாரணமாகக் கால்களில்) உருவாகி இரத்தக்குழய்களில் பயணம் செய்து அங்கு வந்தவையாக (embolic) இருக்கவில்லை. இப்படி இரத்தம் செல்வது தடைப்படுவதனால் கலங்கள் இறந்துபோகின்றன. இழையங்களும் உறுப்புக்களும் செயலிழந்து போகின்றன. எனவே இதில் நாம் கண்டது, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சி (inflammation) காரணமாக குழாய்களின் சுவர்கள் காயப்படும்போது அவற்றைத் தடுத்தி நிறுத்த இரத்தம் கட்டியாகுதல் நடைபெறுகிறது என்பதே தவிர வேறு எங்கும் உருவாகி நுரையீரலுக்கு கொண்டுவரப்பட்ட இரத்தக்கட்டிகள் அல்ல. இப்படி அடைப்புகள் ஏற்படும்போது இருதயத்தால் தேவையான பகுதிகளுக்கு இரத்தத்தைக் கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் ஒக்சிசனின் அளவும் குறைகிறது.

கே: இப்படியான இரத்தக் கட்டிகளை வைரஸ்கள் தோற்றுவிக்கின்றனவா அல்லது உடலின் நோயெதிர்ப்பு செயற்பாட்டின் காரணமாக இக் கட்டிகள் தோன்றுகின்றனவா?

ப: அதுபற்றி இன்னும் எமக்குத் தெளிவான விளக்கம் இல்லை. இருப்பினும், எனது எண்ணம், இது உடலின் நோயெதிர்ப்பு செயற்பாட்டின் பக்க விளைவுகளில் ஒன்றான அழற்சியின் காரணமாக, கட்டியாவதாக (thrombosis) இருக்கலாம் என்பதே.

கே: நீங்கள் பிரேதங்களில் பரிசோதனைகளைச் செய்யும்போது சுவாசப் பைகளை மட்டும் இலக்கு வைத்துப் பரிசோதனைகளைச் செய்கிறீர்களா அல்லது மூளை போன்ற இதர உறுப்புக்களையும் பரிசோதிக்கிறீர்களா?

ப: எங்களது முதலாவது பரிசோதனையில் மூளையை நாங்கள் பரிசோதித்தோம். அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், மூளையோடு சம்பந்தப்பட்ட மத்திய நரம்புத் தொகுதியில் அதிகம் பாதிப்புகள் இல்லை என்பதைக் கண்டுகொண்டோம். நுண்ணளவிலான தரவுகள் இன்னும் எங்களிடம் இல்லை ஆனாலும் பரிசோதனைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.

கே: SARS-Cov-2 வைரஸ் இன்சுலினைத் தயாரிக்கும் கலங்களைப் பாதிப்பதால் பலருக்கு நீரழிவு நோய் தோன்றுவதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. உங்கள் பரிசோதனைகளின்போது அது பற்றிய தடயங்கள் ஏதும் கிடைத்துள்ளதா?

ப: இல்லை. நீரழிவு நோய் திடீரென்று தோன்றுவது ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்கலாம்.

கே: மிகத் தீவிரமான கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

ப: தற்போது அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 11 பேர்களில் 10 பேருக்கு முற்காப்பாக இரத்தம் கட்டியாவதைத் தடுக்க மென்மையாக்கும் மருந்து கொடுக்கப்படுகிறது. நோயாளிகளின் இடுப்பு, மேற் கால்களிலுள்ள ஆழமான நாடிகளில் கட்டியாதல் காணப்படவில்லை. ஆனால் சுவாசப்பை நாடிகளில் இரத்தம் கட்டியாவதைத் தடுக்குமளவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை.

கே: பிரேத பரிசோதனைகள் மூலம் பெற்ற தரவுகளைப் பெற்ற ஆராய்ச்சியாளரிடமிருந்து எழக்கூடிய மிகப்பெரும் கேள்வி என்னவாகவிருக்கும்?

ப: தற்போதுள்ள நிலையில், வைரஸ் எப்படி உடலுக்குள் நகர்வுகளை மேற்கொள்கிறது, எப்படியான மாற்றங்களுக்கு அது தன்னை உட்படுத்திக் கொள்கிறது என்பது இன்னும் தீர்க்கப்படாத மர்மமாக இருக்கிறது.

Print Friendly, PDF & Email