இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தினால் 66 குழந்தைகள் மரணம்
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
இந்திய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட மருந்தொன்றைப் பாவித்ததனால் கம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணமாகியுள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘மெய்டின் ஃபார்மா’ (Maiden Pharma) எனப்படும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் தடிமன் போன்ற உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்காகப் பாவிக்கப்படும் பாகு (syrup) இக் குழந்தைகளின் சிறுநீரகங்களைப் பாதித்தமையால் அவர்கள் இறந்துள்ளார்கள் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என அதன் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் கெப்றியேசுஸ் தெரிவித்துள்ளார்.

இம் மருந்தைத் தயாரித்த நியூ டெல்ஹியில் அமைந்துள்ள மெய்டென் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பாவிக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தடைசெய்துள்ளது. இந் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க கண்டங்களிலும் விற்பனையாகிறது.
இந் நிறுவனத்தின் தயாரிப்புகள் வேறு பல நாடுகளிலும், வெவ்வேறு பெயர்களில் விநியோகிக்கப்படலாம் எனவும் இதுவரை கம்பியா நாட்டில் மட்டும் இவ்விடயம் வெளிவந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது. அதே வேளை வேறு பாகுகளும் இப்படியான மருத்துவப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளன எனத் தெரியவந்துள்ளதாகவும் அவை பற்றி மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கம்பியா நாட்டின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் முஸ்தாபா பிட்டாயே தெரிவித்துள்ளார். மெய்டின் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளைத் தடைசெய்தவுடன் அந் நாட்டில் குழந்தை மரணங்கள் குறைந்துவிட்டன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டைஎதிலீன் கிளைகோல் (diethylene glycol ) மற்றும் எதிலீன் கிளைகோல் (ethylene glycol) போன்ற பதார்த்தங்களைக்கோண்டு தயாரிக்கப்படும் மருந்துப் பாகுகளே இப்பிரச்சினைகளுக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. 5 வயதுக்குக் குறைந்த வயதுள்ள குழந்தைகள் இம் மருந்தை எடுத்து மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் சுகவீனமாகி இறந்துவிடுகின்றனர். அனைவரும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதனாலேயே இறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
‘புறோமீதசீன் ஓரல் சொலூஷன்’ ( Promethazine Oral Solution), கொஃபெக்ஸ்மலீன் பேபி கொஃப் சிறப்’ (Kofexmalin Baby Cough Syrup), ‘மக்கோஃப் பேபி கொஃப் சிறப்’ (Makoff Baby Cough Syrup) மற்றும் ‘மக்றிப் அண்ட் கோல்ட் சிறப்’ (Magrip N Cold Syrup) ஆகிய நான்கு மருந்துப் பாகுகளும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன.