இடது கை செய்வதை வலது கை அறியும்…
Dr. கனக சேனா MD,
Yale Newhaven Health, Bridgeport CT., USA

டாக்டர் கனக சேனா 70 பதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் குடியேறி, பிறிட்ஜ்போர்ட், கனெக்டிகட்டில் வசிக்கும் ஈழத்தமிழர். நரம்பியலில் (Neurology) மற்றும் உளவியலில் (Psychiatry) நிபுணத்துவம் பெற்றவர். கிறிஃபின் மருத்துவமனையுடன் இணைந்து பணியாற்றும் இவர் யேல் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் (Yale University School of Medicine) பேராசிரியராகவும் கடமையாற்றுகிறார். அனைத்துலக மருத்துவ நல அமைப்புடன் (IMHO USA) இணைந்து ஈழத்தமிழரின் சுகவாழ்விற்காக அரும்பணியாற்றி வருபவர். இது ‘மறுமொழி’ இணைய சஞ்சிகைக்காக அவர் எழுதிய கட்டுரை – ஆசிரியர்
இது ஒரு நிஜ வாழ்வின் சம்பவம். அறிகுறி முதல் காரணம் வரை நடைபெற்ற செயற்பாட்டை மருத்துவர் தரப்பிலிருந்து தந்திருக்கிறேன். எல்லோரது நோய்களும், அறிகுறிகளும், சிகிச்சைகளும் ஒத்திருக்கவேண்டுமென்பதில்லை. உங்களுக்கோ நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கோ இப்படியான அனுபவங்கள் இருப்பின் மருத்துவரைப் பார்ப்பதற்கு இக் கட்டுரை தூண்டுமாயின் அது எனது வெற்றி. – Dr.கனக சேனா
ஒரு நோயாளியின் பயணம்
அவருக்கு 55 வயது, பெண். ஒரு வருடமாகத் தொடர் தலையிடி, அடிக்கடி வரும். அதிகாலையில் கொஞ்சம் அதிகம். குமட்டலோ, வாந்தியோ, வெளிச்சதைக் கண்டு அச்சம் ஏற்படுவதோயில்லை. தொற்றுநோய்களோ அல்லது சூழல் மரபணு மாற்றங்களின் விளவாக ஏற்படக்கூடிய உபாதைகளுமில்லை. எந்தவித அதிர்ச்சிச் சம்பவத்தையும் அவர் சந்தித்திருக்கவில்லை.
சில வேளைகளில் அவர் இடது கையில் தசைப்பிடிப்பை (cramp) உணர்வார். இடது கால் பலவீனமாக இருக்கும். இருப்பினும் வீழ்ந்துவிடாது நடப்பார். சில வேளைகளில் இடது கை மேற்கொள்ளும் செய்கைகளை அவர் வலது கையிலும் உணர்வார்.
இவருக்கு மன அழுத்தம் (depression), மனப்பதட்டம் (anxiety), எலும்பு, தசை சார்ந்த வலி (fibromyalgia), மூட்டு வாதம் (arthritis), முழு உடம்பிலும் வலி (total body pain), பலவிதமான ஒவ்வாமைகள் (many airborne allergies) ஆகிய வியாதிகள் இருந்தன. அவற்றிற்கான பலவித மருந்துகளையும் எடுத்துவந்தார்.
சந்தேகம்
நோயாளியின் மருத்துவச் சரிதம் மிகவும் விளக்கமாகப் பதியப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது காணப்படும் நோயறிகுறிகளோடு (தலையிடி) தொடர்பு படுத்துமளவுக்கு எந்தவித ஆதாரங்களும் புலப்படவில்லை
உடற் பரிசோதனை
வழக்கமான உடற் பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டன. உயிர்த் தடயங்கள் (vital signs) சகலதும் சாதாரணமானவையாகவே இருந்தன. நெற்றிக் குழிகள், தாடை இணைப்புகள் போன்ற, தலைவலியுடன் தொடர்புபடுத்தக்கூடிய உறுப்புகள், எந்தத் தடயங்களையும் காட்டவில்லை. சுய உணர்வு, பேச்சில் ஒழுங்கு, அறிவாற்றல் போன்ற உணர்வு வெளிப்பாடுகளில் குறைபாடுகள் காணப்படவில்லை. கண்ணுள் அழுத்தம் (papilledema) இருக்கவில்லை. கண்ணின் நரம்புகளில் குறபாடுகளில்லை (இவைகளும் தலைவலிக்குக் காரணமாக அமைபவை).
‘கண்ணாடி அசைவுகள்’ (Mirror Movements)
புதிர் இறுதியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழத் தொடங்கியது. நோயாளியின் இரண்டு கைகளையும் சமாந்தரமாக வைத்து ஒரு கையில் அசைவுகளைத் தூண்டியபோது (voluntary) மற்றக் கையும் அதே அசைவுகளைத் தானாகவே மேற்கொண்டது (involuntary). இடது கை செய்ததை வலதுகை அப்படியே பின்பற்றியது. இதை ஆங்கிலத்தில் ‘mirror movements’ என்பார்கள். கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் போலவே இருபக்க அங்கங்களின் அசைவுகளும் ஒன்றை மற்றது பின்பற்றுவதாக இருக்கும். இதன் காரணத்தை அறிவதற்குமுன் நாம் நமது மூளை பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.Related: சீனாவில் வேகமாகப் பரவும் வைரஸ் |’சார்ஸ்’ எனச் சந்தேகம்!
மூளையின் தொழிற்பாடு – ஒரு சிறு விளக்கம்

மூளை, வலது சோணை, இடது சோணை என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொழிற்பாட்டு ரீதியாக வலது சோணை உடலின் இடது பக்கத்தையும், இடது சோணை உடலின் வலதுபக்கத்தையும் இயக்குகின்றன. இரண்டு சோணைகளையும் ‘கோர்ப்பஸ் கலோசம் (corpus callosum) நார்த்தன்மையான சுவர் இணைக்கிறது. குழந்தை பிறந்து நான்கு வயதுவரை இச் சுவர் முற்றாக விருத்தியடைவதில்லை. 11 வயதையடையும்போது ஓரளவு முற்றாக விருத்தியடைந்துவிடும்.
முற்றாக விருத்தியடையும் வரை இரண்டு சோணைகளின் தொழிற்பாடுகளும் ஒன்றுக்கொன்று குழம்பிக்கொள்வதுண்டு. அப்போது இரண்டு பக்க உறுப்புகளும் ஏக காலத்தில் ஒரே விடயத்தைச் செய்ய முயற்சிப்பது சாதாரண நிகழ்வுகள்.

கோர்ப்பஸ் கலோசம் முற்றாக விருத்தியடைந்ததும் இச் செயற்பாடு நின்றுவிடுகிறது. விருத்தியில் குறைபாடு இருந்தாலோ (immature transcallosal inhibition) அல்லது நோய் காரணமாகவோ, முதிய வயதினரிலும் இந்த -இடது செய்வதை வலதும் செய்யும் நிலைமை ஏற்படலாம். முதிய வயதில் இது ஏற்பட்டால் அது ஏதோ ஒரு நோயின் காரணமாக இருக்கலாம். சில வகையான பாரிசவாதம் ( strokes), பார்க்கின்சன்ஸ் ( Parkinson’s) வியாதி போன்றவை மேற்குறிப்பிட்ட நோயின் வகையிலடங்கும்.
இந் நோயாளியில் ‘கண்ணாடியசைவுகளை’ அவதானித்ததன் பெறுபேறாக மூளையை ஸ்கான் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
மூளையை ஸ்கான் செய்தல்

மூளையில் நான்கு முக்கிய அறைகளுண்டு அவை முள்ளந்தண்டின் நடுவே பிடரி முதல் குதம் வரை செல்லும் குழாயோடும் தொடர்புபட்டுள்ளது. இவ்வறைகளை மூளை-முள்ளந்தண்டுத் திரவம் Cerebrospinal Fluid) நிரப்பியிருக்கிறது. இத் திரவம் மூளையில் உள்ள நரம்புக்கலங்களைச் சூழ்ந்து அவற்றுக்குப் பாதுகாப்பையும் கொடுத்து அதே வேளை அவற்றுக்கான போஷாக்குகளை வழங்கியும் கழிவுகளைக் காவிச் செல்லும் ‘நதியாகவும்’ செயற்படுகிறது. மென்மையான மூளையின் பாகங்களை அதிர்ச்சியினின்றும் பாதுகாக்கின்றது. இந்த ‘நதியின்’ ஓட்டம் எங்காவது தடைப்படும்போது அறைகளில் அமுக்கம் அதிகரிக்கிறது. இவ்வறைகளைத் தொடுக்கும் குழாய்களில் ஏற்படும் வளர்ச்சி (tumor) அல்லது விபத்துக்களின் போது காயப்படுதல் காரணமாக அடைப்புகளோ அல்லது குழாய்களில் இறுக்கங்களோ ஏற்படலாம். திரவ ஓட்டம் தடைப்படுதல் காரணமாக ஏற்படும் அமுக்கத்தால் (increased intracranial pressure (ICP) )தலைவலி உணரப்படுகிறது.


நோயாளியின் மூளையை ஸ்கான் செய்யும்போது மூளையின் நான்கு அறைகளினது அளவுகள் அவதானிக்கப்படுகின்றன. அவை அளவில் பெரிதாக இருப்பின் திரவ ஓட்டம் எங்கோ தடைப்பட்டிருக்கிறது எனக் கருதப்படும். அதிகரிக்கும் அழுத்தம் தொடர்ந்து வரும் தலைவலியைத் தருகிறது. அழுத்தம் தொடர்ந்திருப்பின் மூளையின் இதர பாகங்கள், முள்ளந்தண்டு பாதிக்கக்கூடிய சந்தர்ப்பங்களுமுண்டு.

இந்த நோயாளியின் மூளையை ஸ்கான் செய்தபோது, மூளை-முள்ளந்தண்டுத் திரவத்தைக் கொண்டுசெல்லும் பாதையில் வளரி (tumor) ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்களின் சந்தேகம் உறுதியானது
சிகிச்சை
நோயாளியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வளரி (tumor) அகற்றப்பட்டது. அது புற்றுநோயைக் கொண்டதல்ல (benign) என்பது நல்ல செய்தி. இதன் பின்னர் அவர் கபாலத்தில் அமுக்கம் குறைந்ததனால் அவர் நிரந்தர தலைவலியிலிருந்து விடுதலை பெற்றார்.
இன்னுமொரு விடயம். மிக மிக மெதுவாக வளரும் அசாதாரண வளரிகளுக்கு உடல் பழக்கப்பட்டுவிடுவதுடன், அதற்கான எதிர்ப்பு நடைமுறைகளையோ அல்லது மாற்று வழிகளையோ விருத்தி செய்து கொள்ளும். இந்த நோயாளியின் விடயத்தில் வளரியின் மெதுவான வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மூளையும் சமரசம் செய்து கொண்டிருக்கலாம் (accommodating slower changes). அதிகரித்த அமுக்கத்தைத் தவிர வேறெந்த அறிகுறிகளையும் உடல் காட்டிக்கொள்ளவில்லை.
இதன் மூலம் நாம் கற்றுக்கொண்ட விடயம், நோயாளி ஒருவரின் மொத்தமான ‘மருத்துவ நிலைமையையும்’ (total clinical picture) ஒருமித்துப் பார்க்க வேண்டும் என்பதே. தனியே சில பரிசோதனை முடிவுகளை மட்டும் வைத்துக்கொண்டு தீர்வுகளை எட்ட முடியாது. இந்த அணுகுமுறை மூலம் ஒரு நோயாளியைக் குணப்படுத்தியதில் எங்களுக்குப் பரம திருப்தி.
எனவே, தலைவலி என்பது ‘பிரச்சினைகளால்’ மட்டும் ஏற்படும் ஒன்றல்ல, மருத்துவக் காரணங்களினாலும் ஏற்படலாம் என்பதையே நான் இங்கு சொல்ல வந்தது. முதிய வயதுகளில் அங்க அசைவுகளில் ஒருவகை ஒத்திசைவு (mirrored movements) இருப்பின் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
No related posts.