ஆய்வுகூடத்தில் உருவாக்கிய மூளை தன் ‘கண்களை’ வளர்த்துக் கொண்டது!

‘Srem Cells’ எனப்படும் முளையக் கலங்களைக் கொண்டு உடலின் விதம் விதமான உறுப்புகளை வளர்த்துக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் கடந்த பல வருடங்களாகப் பல விஞ்ஞானிகளாலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது விந்து, முட்டையைக் கருக்கொள்ள வைத்ததும் உருவாகும் முளையம் (embryo) தொடர்ந்து கலப் பிரிவடைந்து உடலுக்குத் தேவையான சகல இழையங்களையும், உறுப்புக்களையும் உருவாக்குகிறது. இதில் எந்தக் கலம் எந்த உறுப்பை உருவாக்குகிறது என்பதை விஞ்ஞானிகள் அறிந்து அக் கலங்களை ஆய்வுகூடத்தில் வளர்த்தெடுப்பதன் மூலம் தேவையான உறுப்புக்களை ஆய்வுகூடத்தில் செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே கண்டுபிடித்துள்ளார்கள். இக் கலங்களையே ‘ஸ்டெம் கலங்கள்’ (stem cells) என அழைப்பர்.

மனித உடலில் செயலிழந்துபோன அல்லது செயற்பாடு பலவீனமாகப் போன உறுப்புக்களை மாற்றுவதற்கு அல்லது மறுசீரமைப்பதற்கு ஆய்வுகூடத்தில் செய்யப்பட்ட இவ்வுறுப்புக்களைப் பாவிக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. இருப்பினும் அவர்களது இன்நோக்கம் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.

Image Credit: Stock Photos (Royalty free div)

உதாரணத்திற்கு ஒருவருக்கு மாரடைப்பு வந்து இருதயத்தில் உள்ள தசைகள் இறந்து அல்லது பலவீனப்பட்டுப் போனால் இறந்துபோன அத் தசைகளை மீளவும் வளர்த்தெடுக்க இந்த ஸ்டெம் கலங்கள் உதவும். அதே போன்று உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கென நீண்டகாலம் காத்திருப்பவர்களுக்கு ஆய்வுகூடத்தில் ஸ்டெம் கலங்களிலிருந்து வளர்த்தெடுத்த உறுப்புக்களைப் பாவிக்க முடியுமென்பதும் இவ்விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

இப்படியொரு சமீபத்திய ஆராய்ச்சியின்போது ஆய்வுகூடத்தில் விஞ்ஞானிகள் சில ‘மினி’ மூளைகளை வளர்த்தெடுத்தபோது அதிசயமாக அம் மூளைகள் தமக்கு பார்வை மூலம் தகவல்களை அனுப்பும் கண்களின் நரம்புத் தொகுதியைத் தாங்கிய விழிக் கிண்ணங்களையும் ( optical cups) சேர்த்தே வளர்த்திருந்ததை அவதானித்துள்ளனர். ‘ஓர்கனோயிட்ஸ்’ (organoids) என அழைக்கப்படும் இம் மினி உறுப்புக்களை ஸ்டெம் கலங்களிலிருந்து, ஆய்வுகூடத்தில் விஞ்ஞானிகள் வளர்த்தெடுக்கின்றனர். இப்படியாக ‘துடிக்கும்’ மினி இதயங்களை விஞ்ஞானிகள் ஏற்கெனவே வளர்த்திருந்தனர். இப்படி உருவாக்கப்பட்ட மினி மூளைகள் கரு நிலையிலிருக்கும் குழந்தைகளைப் போலவே மூளை அலைகளை (brain waves) அனுப்புவதையும் விஞ்ஞானிகள் பதிவு செய்திருந்தனர்.

ஜேர்மனியிலுள்ள டுசுல்டோர்ஃப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் விஞ்ஞானியான ஜே.கோபாலகிருஷ்ணனும் அவரது குழுவினரும் இந்த மினி மூளை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மினி மூளைகளை வேறு விஞ்ஞானிகள் ஏற்கெனவே ஆய்வுகூடத்தில் உருவாக்கியிருந்தாலும், இவர்கள் ஒருபடி மேலே போய் அம்மூளைகளின் மூலம் கண்களில் விழித்திரை (retina) எனப்படும் கண்ணின் பிரதான பகுதியைத் தாங்கி நிற்கும் ‘விழிக் கிண்ணத்தையும்’ (optic cup) கூடவே உருவாக்கியுள்ளார்கள். விழித் திரையென்பது கட்குழியின் பின் சுவரில் பரந்திருக்கும் ஒளியை உணரும் கலங்களால் (ganglion cells) ஆனது. இக் கலங்களே ஒளியை அல்லது பிம்பத்தை மின்னலைகளாக மாற்றி நரம்புக் கலங்களினூடு (optic nerve) மூளைக்கு அனுப்புபவை. மூளை அதைக் கிரகித்து பதிவு செய்துகொள்கிறது (learning). இந்த ஒளித்திரையிலுள்ள உணரும் கலங்கள் பழுதடைந்தாலோ அல்லது அதை மூளைக்கு அனுப்பும் நரம்பு (optic nerve) பழுதடைந்தாலோ ஒருவர் பார்வையை இழந்துவிடுகிறார். ஒருவரது விழித்திரையில் 1 மில்லியனுக்கு மேற்பட்ட காங்கிளியன் கலங்கள் உள்ளன.

ஜே பாலகிருஷ்ணனும் அவரது குழுவினரும் செய்த இவ்வாராய்ச்சியின்போது உருவாக்கப்பட்ட இந்த மினி மூளை, விழித்திரைகளைக் கொண்ட ‘ஒளிக் கிண்ணங்களை’ உருவாக்கியிருப்பது அவதானிக்கப்பட்டது.

ஒரு மனிதக் கருவில் விழிக் கிண்ணம் உருவாக 30 நாட்களும் விழித்திரை உருவாக 50 நாட்களும் எடுப்பதைப் போலவே ஆய்வுகூடத்தில் வளர்க்கப்பட்ட மினி மூளையிலும் விழிக் கிண்ணம் 30 நாட்களிலும், விழித்திரை 50 நாட்களிலும் உருவாகியிருந்தது என கோபாலகிருஷ்ணன் குழுவிநரின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்டெம் கலங்கள் மூலம் உருவாக்கப்படும் விழிக் குமிழ் மற்றும் விழித்திரை ஒரு காலத்தில் பார்வை இழந்தவர்களுக்கு பார்வையை மீளப்பெறும் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது.

இவாராய்ச்சியின் பெறுபேறுகள் ஆகஸ்ட் 17 Cell Stem Cell சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது.

Print Friendly, PDF & Email