ஆண் நிறமூர்த்தம் தூர்ந்துபோகிறது – யப்பானிய ஆய்வு
10 மில்லியன் வருடங்களில் ஆணினம் முற்றாக அழிந்து போகலாம்.
அகத்தியன்
பாலூட்டி விலங்கினங்களில் ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் நிறமூர்த்தமான (chromoisome) ‘Y’ விரைவில் இல்லாமல் போகலாம் என யப்பானில் நடைபெற்ற ஆய்வொன்று கூறுகிறது. அதற்காக ஆணினம் அஞ்சத் தேவையில்லை. ‘Y’ நிறமூர்த்தத்தின் வீரியம் பல மில்லியன் வர்டுடங்களாகவே தூர்ந்துகொண்டு போகிறது என்பது முன்னரே அறியப்பட்ட உண்மை. ஆனாலும் கூர்ப்பு அதைவிட ஒருபடி மேலே போய் ‘Y’ நிறமூர்த்தத்திற்குப் பதிலாக இன்னுமொரு புதிய நிறமூர்த்தத்தை உருவாக்கி வருகிறது என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.
யப்பானிய அமாமி தீவுகளில் வாழும் எலி இனமொன்றில் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு பெற்ற தகவல்கள் தேசிய விஞ்ஞான அக்கடெமி சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது.
நிறமூர்த்தங்கள் பற்றிய சிறியதொரு வகுப்பு
மனித இனத்தின் அதி சிறிய கூறான கலத்தின் நடுவே பாதுகாப்பாக இருக்கும் கருவினுள் (nucleus) 23 சோடி நிறமூத்தங்கள் இருக்கின்றன. ஒரு சோடியில் ஒன்று தாயிலிருந்தும் மற்றது தந்தையிலிருந்தும் பெறப்படும். இவற்றில் 22 சோடிகள் (autosomes) மனிதரின் பல்வேறு குணாதிசயங்களைத் தீர்மானிக்கும். மீதியான ஒரு சோடி XX அல்லது XY (sex chromosomes) அவரது பாலினத்தைத் தீர்மானிக்கும். கருவுறுதல் நடைபெற்று கலப்பிரிவு நிகழும்போது அக் கரு ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இவற்றில் தாய் தருவது X நிறமூர்த்தம் மட்டுமே. தந்தையிடமிருந்து Y நிறமூர்த்தம் கிடைக்குமானால் XY சோடியாகி ஆண்பிள்ளையாக அக் கரு உருவாகிறது. தந்தையிடமிருந்தும் X நிறமூர்த்தமே கிடைக்கப்பெறுமானால் அது பெண்பிள்ளையாக உருவாகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி 22 ஓட்டோசோம் சோடிகளிலும் இருக்கும் ஒற்றை (தாய் +தந்தை) நிறமூர்த்தங்கள் அளவுகளில் சரி சமனாக இருக்கும். ஆனால் கடந்த 10 மில்லியன் வருடங்களாக இவற்றில் Y நிறமூர்த்தம் அளவில் சுருங்கிக்கொண்டு போகிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சுமார் 200-300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் X, Y இரண்டும் உயரத்தி சரி சமனாக இருந்தாலும் தற்போது Y குள்ளமாக ஆகிவருகிறது எனவும் அவற்றில் இருக்கும் பரம்பரை அலகுகளில் (genes) ஏறத்தாழ 80 மட்டுமே (3% ) வீரியமுடையனவாக இருக்கின்றன எனவும் அவர்கள் கூறுகிறார்கள். பரம்பரை அலகுகளில்தான் ஒருவரது குணாதிசயம் பொதிந்திருக்கிறது. எந்த நிறமூர்த்தம் பலமான பரம்பரை அலகுகளைக் கொண்டிருக்கிறதோ (தாய் அல்லது தந்தை) அவரது குணாதிசயம் குழந்தையில் வெளிப்படுகிறது (இதைத் தான் ‘தலையெழுத்து’ என ந்ம் முன்னோர்கள் கூறினார்களா?). இந்த வீதத்தில் போனால் விரைவில் Y நிறமூர்த்தம் இல்லாமலே ஆக்கப்பட்டுவிடும் என்கிறார்கள் அவர்கள். இந்த நிலையில் யப்பானிய ஆராய்ச்சி ஆண்களுக்கு சற்று உற்சாகத்தை அளிக்கிறது.
யப்பானிய எலிகளில் மேற்கொள்ளப்பட்ட நிறமூர்த்த ஆராய்ச்சியின்போது அவை தமது பாலினத் தீர்மானத்துக்கு y நிறமூர்த்தத்தில் தங்கியிராது முற்றிலும் புதியதொரு நிறமூர்த்தத்தை உருவாக்கியிருக்கலாம் என கருதுகின்றனர். ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அசாட்டோ குறோய்வாவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட இவ்வாராய்ச்சியில் தற்போதுள்ள y நிறமூர்த்தம் இன்னுமொரு 10 மில்லியன் வருடங்களில் முற்றாக இல்லாமல் போய்விடுமெனவும் இந்த எலிகளைப் போல புதிய நிறமூர்த்தமொன்றை மனிதரும் உருவாக்கமுடியாவிட்டால் மனித இனம் 10 மில்லியன் வருடங்களில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்வுகூறியுள்ளார்.
ஆனாலும் அஞ்சற்க என்று இன்னுமொரு விஞ்ஞானிகள் குழு அபயத்தையும் தருகிறது. ஏர்கெனவே சில உயிரினங்களில் காணப்படும் அம்சமான ‘தற்கருத்தரித்தல்’ (self-fertilization) மனிதரிலும் நடைபெற வாய்ப்புண்டு. அப்போது பெண்கள் தாம் உருவாக்கும் சூல்களைத் தாமே கருத்தரித்து பிள்ளைகளை உருவாக்கிக் கொள்வர் என்கிறார் காள்ற்றன் பல்கலைக்கழக பாலியல் கூர்ப்புக் கற்கை விஞ்ஞானியான ரூட் கோர்லிக். இதைத் தான் பாரதி பெண் விடுதலை என்றானோ?