அழற்சி (Inflammation) என்றால் என்ன?

அகத்தியன்

கோவிட்-19 நோய் மனிதரைக் கொல்வதற்கு முக்கியமான காரணம் SARS-CoV-2 வைரஸ் என்பதைவிட அதை அழிக்க நமது உடல் மேற்கொள்ளும் பாதுகாப்பு முயற்சிகள் அதன் தேவையை மீறிப்போவதால்தான் என்பது பொதுவாக மருத்துவ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. சுருக்கமாக அதை அழற்சி (inflammation) எனக் கூறலாம்.

அழற்சி என்றால் என்ன?

உங்கள் உடலிலுள்ள வெண்கலங்கள் (வெண்குருதித் துணிக்கைகள்) உடலுக்குள் வரும் பக்டீரியா அல்லது வைரஸ் போன்ற கிருமிகளை அழிக்க எடுக்கும் நடவடிக்கைக்குப் பெயர்தான் அழற்சி.

ஆனால் சில வேளைகளில் வெளியிலிருந்து கிருமிகள் வராமலேயே நமது உடல் இப்பாடியான பாதுகாப்பு முயற்சிகளை முடுக்கி விடுகிறது. மூட்டு வாதம் மோன்ற வியாதிகளுக்கு இதுவே காரணம். தானாக ஆரம்பிக்கப்படும் இந் நடவடிக்கையால் ஏற்படும் வியாதிகளை autoimmune diseases என்கிறார்கள். இதன் போது உடலின் இழையங்கள் தொற்றுக்குள்ளாகிவிட்டன என்று உடல் கற்பனை செய்துகொண்டு அவற்றைப் பாதுகாக்கிறோம் எனக்கூறி அழிக்கத் தொடங்கி விடுகிறது. பெரும்பாலான மூட்டு இழையங்கள் இப்படி அழிக்கப்படும்போது மூட்டுவாதம் (rheumatoid arthritis) தோன்றுகிறது. இதைவிட சரும நோய்கள் (psoriasis), குடற் புண்கள் போன்ற பல நோய்களுக்கும் இது காரணமாகிறது.

அழற்சிகளின் வகைகள்

அழற்சியில்ம் குறுங்கால (acute) மற்றும் நீண்டகால (chronic) வகைகள் உண்டு. குறுங்கால அழற்சி, சில மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் குணமாகிவிடும். நீண்டகால அழற்சி குணமாக மாதங்கள் அல்லது வருடங்கள் பிடிக்கலாம். சில வேளைகளில் அவை திரும்பவும் தாக்கலாம். நீண்டகால அழற்சி, புற்றுநோய், இருதய வியாதி, நீரிழிவு, தொய்வு (ஆஸ்த்துமா), முதுமை மறதி போன்ற நோய்களுக்குக் காரணமாக அமையலாம்.

முடக்குவாதம்

அழற்சியினால் மூன்றுவகை முடக்குவாதங்கள் (arthritis) ஏற்படுகின்றன. அவை, Rheumatoid arthritis, Psoriatic arthritis, Gouty arthritis எனப்பல வகையாகும்.

சில வேளைகளில் எலும்பு தேய்வினால் உண்டாகும் osteoarthritis, fibromyalgia, lower back pain, muscular neck pain ஆகிய நோவுகளுக்கு அழற்சி காரணமாக அமைவதில்லை.

அழற்சியின் அறிகுறிகள்

சருமம் சிவப்பாகுதல், மூட்டு வீங்குதல், மூட்டு வலி, மூட்டு இறுக்கம், மூட்டுகளின் செயற்பாடு இலகுவாக இல்லாமை ஆகிய ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருக்கலாம்.

சில வேளைகளில், காய்ச்சல் (சுரம்) போன்ற அறிகுறிகளையும் (காய்ச்சல், குளிர், களைப்பு, தலையிடி, பசியின்மை, தசையிறுக்கம்) காட்டலாம்.

அழற்சி ஏற்படுவதற்குக் காரணம் என்ன?

கிருமிகள் உடலுக்குள் வந்தவுடன் உடலைப் பாதுகாக்க வெண்கலங்கள் சில இரசாயனப் பதார்த்தங்களை இரத்தத்தில் சுரக்கின்றன. இவை நோய்த் தொற்று ஏற்பட்ட உறுப்புக்களுக்கு அல்லது இழையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அத்தோடு அவ்வுறுப்புக்களுக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கப்படுகிறது. இதனாலேயே அவ்விடங்களில் சருமம் சிவப்பாவதோடு அவ்விடத்தில் வெப்பநிலையும் அதிகரிக்கிறது (அழற்சி / inflammation). இழையங்களுக்கு அதிக பதார்த்தங்கள் கொண்டுசெல்லப்படுவதற்கு இவ்விரசாயனப் பதார்த்தங்கள் உதவி செய்கின்றன. அதிகரித்த திரவங்களால் இழையம் வீக்கமடைகிறது. இந்நடவடிக்கையின்போது சில நரம்புகள் முடுக்கிவிடப்படுவதால் வலியும் உணரப்படுகிறது.

சிகிச்சைகள்

அழற்சியைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இதற்காக மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் இரத்தப் பரிசோதனை, எக்ஸ்-றே போன்ற முறைகளால் உங்கள் நோயின் நிலையை அறிந்த பின்னர் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறார்கள். பின்னர் தரப்படும் மருந்துகள் தேவையற்ற பக்க விளைவுகளைத் தருகின்றனவா என்பதைத் தொடர்ந்து அவதானித்து வருவார்கள். எனவே அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாது, கொடுக்கப்பட்ட அளவில் உட்கொள்வது மிகவும் அவசியம்.

கட்டுப்பாடு

ஒருவரது உணவு முறையும், வாழ்வு முறையும் அழற்சியின் உருவாக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் பெரும்பங்கு வகிக்கிறது. அவற்றில் சில:

  • புகைத்தலை நிறுத்துங்கள்
  • மது அருந்துவதைக் குறையுங்கள்
  • சுமாரான உடல் எடையைப் பராமரியுஙகள்
  • மன உளைச்சலைக் கட்டுப்படுத்துங்கள்
  • ஒழுங்காக அப்பியாசம் செய்யுங்கள்
  • ஒமேகா-3, மஞ்சள், பச்சை தேனீர், மக்னீசியம், வைட்டமின் B6, C, D, E ஆகியவற்றை உங்கள் மருத்துவரோடு ஆலோசித்தபின் அவர்கள் அனுமதியுடன் உட்கொள்ளுங்கள்

அழற்சியைக் குறைக்கும் உணவு வகைகள்

பின்வரும் உணவு வகைகள் உடல் அழற்சியைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

  • தக்காளிப்பழம்
  • ஒலிவ் எண்ணை
  • பச்சை இலை மரக்கறி
  • விதைகள் (அல்மொண்ட், வால்நட்)
  • கொழுப்பு மீன்கள் (சல்மன், ரூணா, சார்டின்கள்)
  • பழங்கள் (பெரிகள், தோடம்பழம்)

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • வெள்ளைப் பாண் (பதப்படுத்திய வெள்ளை மாவில் செய்த உணவுகள்)
  • பொரித்த உணவுகள்
  • இனிப்புக் கலந்த பானங்கள்
  • சிவப்பு, பதப்படுத்திய இறைச்சி (மாட்டிறைச்சி, ஹொட் டோக்)
  • மார்ஜரீன், கொழுப்பு

இக் கட்டுரை தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டது. எப்போதும் உங்கள் மருத்துவர்களது ஆலோசனை இல்லாமல் மருந்துகளையோ, வாழ்வியல் மாற்றங்களையோ செய்ய வேண்டாம். (தமிழ்நலம்)

Print Friendly, PDF & Email