ஃபைசர்-பயோஎன்ரெக் | மொடேர்ணா தடுப்புமருந்துகளின் ஒப்பீடு

அமெரிக்காவும் கனடாவும் அவசர பாவனைக்கென அங்கீகரித்துள்ள இரண்டு கோவிட் தடுப்பு மருந்துகளான ஃபைசர்/பயோஎன்ரெக் , மொடேர்ணா ஆகியன பற்றிய ஒப்பீடு கீழே தரப்படுகிறது.

வயது எல்லை

ஃபபைசர் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பாவிக்கப்படலாம். அதேவேளை, மொடேர்ணா 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே எடுக்க முடியுமெனினும் தற்போது அதை 12-17 வயதுள்ளவர்களில் பரிசோதித்து வருகிறார்கள்.

செயற் திறன்

இரண்டு மருந்துகளும் மிகச் சிறப்பான, பெரும்பாலும் சம அளவிலான பெறுபேறுகளைத் தந்து வருகின்றன. நீண்டகால விளைவுகள் எப்படியென்பது பொறுத்திருந்துதான் பார்க்கப்பட வேண்டும்.

ஃபைசர் மருந்து கொடுக்கப்பட்டவர்களுக்கு 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது ஊசியை ஏற்றி, 7 நாட்களின் பின் பரிசோதித்தபோது 95% செயற்திறனை அது காட்டியுள்ளது. சகல இனக்குழுமங்கள், வயதுக் குழுமங்களிலும் இப் பெறுபேறுகள் ஒன்றாகவே இருந்தன.

மொடேர்ணாவின் இரண்டாவது ஊசி கொடுத்து 14 நாட்களின் பின் 94.1% செயற்திறனைக் காட்டியுள்ளது. இது சகல இனக் குழுமங்களிலும் சமமான செயற்திறனைக் காட்டினாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதன் செயற்திறன் கொஞ்சம் குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகளற்ற கோவிட்-19 நோய்ப் பரவலை இவை தடுக்கின்றனவா அல்லது தடுப்பூசி எடுத்தவர்கள் தொடர்ந்தும் நோயைப் பரப்புவார்களா என்பதை இரண்டு நிறுவனங்களும் உறுதிப்படுத்தவில்லை.

தடுப்பு மருந்துகளின் அளவு

இரண்டு மருந்துகளும் இரண்டு ஊசிகளைப் போடவேண்டுமென்று கூறுகின்றன. முதலாவது ஊசி உடலைத் தயாராக்குவது (primer shot), இரண்டாவது உடலை ஊக்குவிப்பது (booster shot). இவ்விரண்டு ஊசிகளுக்குமிடையே மொடேர்ணாவுக்கு 28 நாட்களும், ஃபைசருக்கு 21 நாட்களும் தேவை.

ஃபைசர் மருந்து, ஒவ்வொரு தடவையும் 30ug (மைக்றோகிராம்) அளவும், மொடேர்ணா ஒவ்வொரு தடவையும் 100ug அளவும் கொடுக்கின்றன.

பக்க விளைவுகள்

பொதுவாக அறியப்பட்ட பக்க விளைவுகள், வலி, களைப்பு, தலைவலி, தசை வலி, மூட்டு வலி ஆகியன. மனிதப்பரிசோதனைகளின் போது சிலருக்கு காய்ச்சல் (சுரம்) வந்திருக்கிறது. பெரும்பாலான பக்க விளைவுகள் இரண்டாவது ஊசிக்குப் பின்னரே ஏற்பட்டுள்ளன. முதிய வயதினரைவிட, பலமான நோய்ப்பாதுகாப்புள்ள (stronger immune system) இளைய வயதினருக்கே அதிக பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஒருவரது உடல் படையெடுத்துவரும் நோய்க்கிருமிகளைத் (போலி) தாக்கும் நடவடிக்கையின் அறிகுறிகளே இப் பக்க விளைவுகள். எனவே இவற்றைக் கண்டு, தடுப்பு மருந்துகள் தீங்குவிளைவிக்கின்றன என எண்ணிவிடவேண்டாம்.

இதுவரைக்கும், இத் தடுப்பு மருந்துகளின் பாவனையால் நீண்டகால தீங்குகள் எதுவும் நேர்ந்ததாக அறிவிக்கப்படவில்லை.

ஃபைசர் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒவ்வாமையைக் (allergy) கொண்ட சிலருக்கு தற்காலிக பக்கவிளைவுகள் (anaphylaxis) ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பனிதப்பரிசோதனைகளில் இப்படியான பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கவில்லை. மொடேர்ணா தடுப்பு மருந்து எடுக்கப்போறவர்களில் இப்படியான விளைவுகள் இருக்குமா என இனிமேல்தான் அறியப்படும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களில் பாதிப்பு

இவ்விரு வகையினரிலும் இம் மருந்துகள் இதுவரை பரிசோதிக்கப்படவில்லை. ஆனாலும் அமெரிக்க நீய்க்கட்டுப்பாட்டு மையத்தின் கோரிக்கைக்கிணங்க மொடேர்ணா கொடுத்த விலங்குப் பரிசோதனைத் தரவுகளின்படி கர்ப்பிணி, பாலூட்டும் எலிகளில் எவ்விதப் பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஃபைசர் விலங்குப் பரிசோதனைகளை முடித்திருந்தாலும், இறுதித் தரவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஆரம்பத் தகவல்களின்படி எலிப்பரிசோதனகளில் எதுவித பாதிப்புகளும் அவதானிக்கப்படவில்லை எனப்படுகிறது.

கர்ப்பிணித் தாய்மார்களும், பாலூட்டும் தாய்மார்களும் இத் தடுப்பு மருந்துகள் எடுப்பது பற்றித் தமது மருத்துவர்களை ஆலோசிக்கும்படி மத்திய உணவு, மருந்து நிர்வாகத்தின் பணிப்பாளர் பீட்டர் மார்க்ஸ் அறிவித்துள்ளார்.

மருந்து சேமிப்பு / களஞ்சியப்படுத்தல் (storage)

ஃபைசர் தடுப்பு மருந்து -70 deg C (-94 deg F) இலும் மொடேர்ணா -20 deg C (-4 deg F) இலும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். அதனால் மருத்துவர் அலுவலகங்களும், மருந்தகங்களும் அநேகமாக மொடேர்ணா மருந்தையே நாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொடேர்ணா மருந்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வீட்டிலுள்ள சாதாரண குளிரூட்டிகள் போதுமானவை.

ஃபைசர் மருந்து குளிரூட்டிகளிலிருந்து எடுக்கப்பட்டு 5 நாட்களில் பாவிக்கப்பட்டுவிட வேண்டும். மொடேர்ணா குளிரூட்டியில் 30 நாட்களும் அறை வெப்பநிலையில் 12 மணித்தியாலங்களும் வைக்கப்பட்டிருக்கலாம்.

மருந்து கொள்வனவு

ஃபைசர் மருந்தைக் கொள்வனவு செய்ய விரும்பும் மருத்துவ மனைகள் / மருந்தகங்கள் / மருத்துவர் அலுவலகங்கள் ஆகக் குறைந்தது 975 அலவுகளை (doses) வாங்க வேண்டும். பெரிய மருத்துவமனைகளுக்கு இது பிரச்சினையில்லை எனினும், சிறிய அலுவலகங்களில் பணிபுரியும் முன்னிலைப் பணியாளர்களுக்கு இது தேவைக்குமதிகமானது. இதனால் அவர்கள் மருந்தைப் பாதுகாக்க வல்ல குளிரூட்டிகளை வாங்க வேண்டும்.

ஒப்பீட்டளவில் மொடேர்ணாவின் ஆகக் குறைந்த கொள்வனவு 100 அளவுகள் மட்டுமே. அத்தோடு எஞ்சிய மருந்துகளை அலுவலகக் குளிரூட்டிகளில் பாதுகாக்கலாம்.

ஃபைசர் மருந்து 5 அளவுப் போத்தல்களைக் (5 dose vials) கொண்டது. மொடேர்ணா 10 அளவுப் போத்தல்களைக் கொண்டது.

நோய்ப்பாதுகாப்பு

தடுப்பு மருந்துகளை எடுப்பவர்கள் நோய்த் தொற்றிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை ஆராய பரிசோதனைகளை மேற்கொண்ட தொண்டர்களின் இரத்தத்திலுள்ள எதிர்ப்பொருள் அளவுகளை (antibody levels) காலக் கிரமத்தில் ஆராய வேண்டும். எதிர்ப்பொருள் அளவுகள் குறைவது என்பது பாதுகாப்பு அருகிப்போகிறது என்பதன் அறிகுறியல்ல எனினும் அது ஒரு குறி காட்டி என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவரை தடுப்பு மருந்தை எடுத்தவர்கள் மீதான தொடர்ச்சியான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு மேலும் ஊக்கி மருந்துகள் (booster shots) கொடுக்க வேண்டுமா அப்படியானால் எப்படியான காலக் கிரமங்களில் அவை கொடுக்கப்படவேண்டும் என்பதற்கான தரவுகள் சேமிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஆராய்ந்து விரைவில் அறிக்கைகளை இந் நிறுவனங்களும், நோய்க்கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன வெலியிடுமென எதிர்பார்க்கலாம்.

Print Friendly, PDF & Email